’தலைவர் 170’ படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக ‘மாமன்னன்’ ரத்னவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது வரை 518 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினி படங்களில் குறுகிய காலத்தில் அதிகம் வசூலித்த படமாக ’ஜெயிலர்’ பார்க்கப்படுகிறது. ’ஜெயிலர்’ வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திற்கான பணிகளை விரைந்து தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுக்கிறது.
’தலைவர் 170’ படத்தை லைகா தயாரிப்பில் ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்திற்கான பூஜை வரும் 26ம் தேதி போடப்படுகிறது. இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட உள்ளதாகவும், ரஜினிகாந்த் போலி என்கவுண்டர்களை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ’வேட்டையன்’ என்ற டைட்டில் வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஜெயிலர் படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தலைவர் 170யில் மீண்டும் போலீஸ் கதாபாத்திரம் நடிப்பது அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைவர் 170 படத்தில் ரஜினிக்கு ’மாமன்னன்’ ரத்னவேலு கதாபாத்திரத்தில் நடித்த பகத் பாசில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, மாமன்னன் படத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் மிரட்டி எடுத்த பகத் பாசில் இந்த படத்திலும் தூள் கிளப்புவார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது.