துரை இயக்கத்தில் சுந்தர்.சி நடித்த ‘தலைநகரம் -2’ திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகத் தயாராகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கிருஷ்ண சாமி ஒளிப்பதிவு செய்ய, சுதர்சன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் தம்பி ராமய்யா, ’பாகுபலி’ படப் புகழ் பிரபாகர், ஆய்ரா, ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன், சேரன் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ’தலைநகரம்’ திரைப்படம் 2006இல் சுராஜ் இயக்கத்தில் வெளியானது. அந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குறிப்பாக, அந்தப் படத்தில் வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்று வரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி மக்களால் சலிக்காமல் ரசிக்கப்படுகிறது. ஆனால் இந்தப் படத்தில் வடிவேலு இடம்பெறாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.