இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜூன் இயக்கத்தில் ’மிர்ச்சி’ சிவா, ஹரிஷா, ராதா ரவி, கருநாகரன். எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கும் ‘சூது கவ்வும் - 2’ படத்தின் மோசன் போஸ்டர் அப்படக்குழுவால் நேற்று(மே 1) வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை ’சூது கவ்வும் -1’ படத்தை தயாரித்த சீ.வி.குமார் தயாரிக்கிறார். மேலும், இந்தப் படம் 100 சதவீதம் முந்தைய பாகத்தின் தொடர்ச்சி எனவும் தயாரிப்பாளர் சீ.வி.குமார் தெரிவித்துள்ளார்.
’சூது கவ்வும்’ திரைப்படம் நடிகர் விஜய்சேதுபதியின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படமாகும். மேலும், இந்தப் படம் தமிழ் சினிமாவில் ‘டார்க் ஹியூமர்’ ஜானர் படங்களுக்கு வழிவகுத்தது. இது தமிழ் சினிமாவில் ஒரு டிரெண்ட் செட்டராக இருந்தது என்றும் கூறலாம்.
அப்படிப்பட்ட திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அதை இயக்கிய நலன் குமாரசாமி இல்லாமல், நடித்த விஜய்சேதுபதி இல்லாமல் எப்படி எடுக்க முடியுமென, இந்தப் படத்தின் அறிவிப்பு வந்தது தொட்டே ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்தன. ஆனால், இந்த மோசன் போஸ்டர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பையே பெற்றுள்ளது. மற்றபடி, இந்தப் படம் முதல் பாகம் கொடுத்த விஷயத்தை முழுமையாகக் கடத்துமா என்பது இப்படத்தின் வெளியீட்டுக்குப் பின்னரே தெரியும்.