ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தத் திரைப்படத்தில், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றம் அளிக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது இந்தப் படத்தில் ரஜினிகாந்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரத்தின் பெயர் அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபடி, இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ‘மொய்தீன் பாய்’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனவும் அவர் இஸ்லாமிய ஆடையில் நடந்து வருவதாக ஃபர்ஸ்ட் லுக் ஒன்றும் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஒரு இஸ்லாமியராக நடிக்கப் போகிறார் என ஏற்கனவே தகவல்கள் கசிந்து வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு வேலைகளை செய்கிறார். இந்தப் படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகுமெனத் தெரிகிறது.