ஜெயிலர் வெற்றி: இமயமலையில் ரஜினி..நடந்தே வந்து பார்த்த ரசிகர்

நடிகர் ரஜினிகாந்த் இமயமலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று பாபாஜி குகையில் தியானம் செய்தார்.
இமயமலையில் ரஜினி
இமயமலையில் ரஜினி

இமயமலைக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்தை ரசிகர் ஒருவர் நடந்தே சென்று சந்தித்து பேசியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. தமிழகத்தில் நடிகர் கமல் நடித்த ’விக்ரம்’ படத்தின் வசூலை முந்தியுள்ளதாகவும், உலகம் முழுவதும் 400 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் சினிமா விமர்சகர்களால் கூறப்படுகிறது. ஜெயிலர் படம் விரைவில் 1000 கோடி வசூலை தொடும் எனவும் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பு திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் ஒரு வாரம் இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார்.

சாதுக்களிடம் ஆசிபெற்ற ரஜினி
சாதுக்களிடம் ஆசிபெற்ற ரஜினி

கடந்த 4 ஆண்டுகளாக உடல்நலக்குறைவு மற்றும் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இமயமலைக்கு செல்லாமல் இருந்த ரஜினிகாந்த் இந்த ஆண்டு ’ஜெயிலர்’ படம் முடிந்த கையோடு தனது ஆன்மிக பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

தற்போது இமயமலையில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அங்குள்ள ஆன்மிக தலங்களுக்கு சென்று சாதுக்களிடம் ஆசிபெறும் காட்சிகள் சமீபத்தில் வெளியானது.மேலும் நேற்று சுதந்திர தினத்தையொட்டி அங்கு தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி உள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் தனது ஆன்மிக குருவாக பார்க்கூடிய பாபாஜி குகைக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று தியானம் செய்துள்ளார். ரஜினிகாந்தின் பாதுகாப்பிற்கு 4க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு உடன் சென்றுள்ளனர்.

பாபாஜி குகையில் தியானத்தில் ரஜினி
பாபாஜி குகையில் தியானத்தில் ரஜினி

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை பார்ப்பதற்காக அவரின் தீவிர ரசிகர் ஒருவர் தமிழ்நாட்டில் இருந்து நடந்தே இமயமலைக்கு சென்றுள்ளார். இந்த விஷயத்தைக்கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், ரசிகருக்கு தேவையான பண உதவியையும், இமயமலையில் தங்குவதற்காக ஏற்பாடுகளையும் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் ரசிகரிடம் பேசிய ரஜினிகாந்த், அவரின் பயணம் மற்றும் உடல்நலம் குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது.

பாபாஜி குகையில் தியானத்தை முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்குள்ள ஆன்மிக தலங்களில் தரிசனம் முடிந்ததும் விரைவில் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com