மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் நடித்து வெளியான ‘பொன்னியின் செல்வன் -2’, கடந்த வாரம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், இந்தத் திரைப்படம் வசூலில் தற்போது 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துவிட்டதாக அப்படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளி(ஏப்.28) வெளியான இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
முதல் பாகத்தில் விட்ட கதையில் இருந்து ஆரம்பிக்கும் படமாக உருவான இந்த இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் குறைவாகவே தெரிந்தது. அதைத்தொடர்ந்து மாபெரும் புரோமொஷனாக, இந்தியாவெங்கும் பயணம் செய்த அந்தப் படக்குழுவால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு லேசாக எழத் தொடங்கியது. இந்நிலையில், தற்போது இந்தப் படம் வெளியாகி இத்தகைய வசூல் சாதனையை படைத்துள்ளது. ஏ.ஆர்.ரகுமானின் இசை, தோட்டா தரணியின் கலை, விக்ரமின் நடிப்பு, மணிரத்னத்தின் காதல் காட்சிகள் என குறிப்பிட்ட சில விஷயங்கள் விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் படத்தின் முதல் பாகமும் மாபெரும் வசூல் சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.