அஜித்குமார் தமிழ்சினிமாவில் மாபெரும் நட்சத்திரம், அதிக ரசிகர் கூட்டம் கொண்ட உச்ச நடிகர், சிறப்பான நடிகர் என்பதையெல்லாம் தாண்டி அவரது சொந்த வாழ்க்கையில் அவர் விரும்பி செய்யும் விஷயங்கள் நிறைய உண்டு. அதில் முதன்மையான ஒன்று பைக் மீதான அவருக்கு இருக்கும் காதல். அதன் விளைவாகத் தான் தற்போது தனது பைக்கைக் கொண்டு உலகச் சுற்றுப் பயணத்தில் இறங்கியுள்ளார் அஜித்குமார். இந்நிலையில், அந்தப் பயணத்தை பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா தன் கேமராக்களால் பதிவுசெய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உலக சுற்று பய்ணமானது அஜித்தின் வாழ்க்கையிலேயே அவர் நிகழ்த்தவிருக்கும் மாபெரும் சாதனையாக இருக்கப் போவதால், அதை பதிவு செய்யவுள்ளாராம் அஜித். மேலும், முதல் கட்ட சுற்றுப் பயணம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிகிறது. இந்த மொத்த சுற்றுப் பயணமும் முடிந்ததும், அந்தப் பதிவை ஒரு ஆவணப் படமாகவும் அஜித்குமார் வெளியிட வாய்ப்புள்ளது. நீரவ் ஷா, அஜித்தின் ‘துணிவு’, ‘வலிமை’ ‘பில்லா’,’நேர்கொண்ட பார்வை’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். மேலும், அஜித்தின் 62ஆவது படமான ‘ஏ.கே 62’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை(மே 1) அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகுமென ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.