கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 300 கிலோ போதைப் பொருள் மற்றும் ஏகே 47 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஆதிலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் 14வது குற்றவாளியாக ஆதிலிங்கம் சேர்க்கப்பட்டு என்ஐஏ அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
அதையடுத்து போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான குணசேகரனின் பினாமியாக ஆதிலிங்கம் இருந்ததது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போதைப் பொருள் கடத்தலில் கிடைக்கும் பணத்தை கிரிப்டோ கரன்ஸி, சினிமா, அரசியல் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைதான ஆதிலிங்கம் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் முன்னாள் உதவியாளராக இருந்துள்ளார். ஆதிலிங்கம் போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை சினிமாவில் முதலீடு செய்துள்ளதை என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து ஆதிலிங்கம் குறித்து மேலும் சில தகவல்கள் அறிந்து கொள்வதற்காக, நடிகை வரலட்சுமி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து நடிகை வரலட்சுமி தற்போது ஆந்திராவில் படப்படிப்பில் இருப்பதால் தற்போது ஆஜராக முடியாது என அவர் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.