மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று(ஏப்.30) வெளியானது. வடிவேலுவை புதிய பரிமாணத்தில் அந்த போஸ்டரில் காடியிருந்தது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில், தற்போது இந்தப் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை அப்படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் போஸ்டரில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர். மூவரும், கருப்பு உடையில் மிகவும் அழுத்தமான பாவனைகளுடன் நிற்பதாக இந்தப் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இநந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படம் குறித்து ஏற்கனவே இயக்குநர் மாரி செல்வராஜ், ”மாமன்னன் படம் என் திரைவாழ்வில் மிகப் பெரிய படமாகும். அடையாள அரசியலைப் பற்றி இந்தப் படத்தில் பேசவுள்ளேன். இதுவரை நாம் காணாத ஒரு வடிவேலுவை இந்தப் படத்தில் நாம் பார்க்கலாம்” எனத் தெரிவித்திருந்தார். ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார். மேலும், இந்தப் படம் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி ப்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.