இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களால் ‘இசை இளவரசன்’ 'Drug Dealer' என அன்போடு அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.இவர் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கும் திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தனது அப்பா இளையராஜா என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகம் ஆனாலும், தனித்துவ இசையால் தனக்கென்று தனி அடையாளத்தை பெற்றுள்ளார்.
யுவனின் ஸ்பெஷலே மனதை மயக்கும் பாடல் மற்றும் பிஜிஎம் தான். இவர் பி.ஜி.எம்மிற்கே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக ’காதல் வளர்த்தேன்’, ‘போகாதே..’ஏதோ ஒன்று என்னை தாக்க’, பிரியாணி படத்தில் வரும் ’எதிர்த்து நில்’ போன்றவை எவர்கீரின் பாடல்களாக உள்ளன.
அப்பா இசைஞானியாக இருந்தாலும், பைலட் ஆக வேண்டும் என்ற ஆசையில் இருந்தவரை இசைத்துறைக்கு செல்ல வேண்டும் என அவரது தாயார் கூறியதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக யுவனுக்கு தாய் மீது அதீத பாசம் உண்டு. அவர் மீது கொண்ட பாசத்தால் தாய் ஜீவா மறைவிற்கு பின்னர் அவர் இசையமைத்த ‘ஆராரிராரோ..’பாடல் தாய்க்கு சமர்ப்பணம் செய்வதாக பல மேடைகளில் கூறுவார் யுவன்.
வெங்கட் பிரபு- யுவன்சங்கர் ராஜா கூட்டணி எப்போதுமே சிறப்பாக அமைந்துள்ளது.அதேபோல் ராம்-யுவன்-நா.முத்துகுமார் கூட்டணி எல்லோராலும் கொண்டாடப்படும் கூட்டணியாக உள்ளது. இயக்குநர்கள் வெங்கட் பிரபு, லிங்குசாமி, விஷ்ணுவர்தன், ராம் ஆகியோரின் செல்லப்பிள்ளை யுவன் சங்கர் ராஜா என்று கூறலாம்.
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என இரு பெரும் இசையமைப்பாளர்கள் கோலோச்சிய காலத்தில் தன் இசை ஜாலத்தால் தனக்கென்று தனி இடத்தையும், ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியவர் யுவன்.
பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்களுடன் இணைந்து இசைமைத்துள்ளார் யுவன். அடுத்ததாக விஜய்- வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாக உள்ள ’தளபதி 68’ படத்திற்கு இசையமைக்க உள்ளார். இதேபோல் யுவன் இசையில் மேலும் சிகரங்களை தொட மனதார வாழ்த்துவோம்.