மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார் இயக்குனர் லோகேஷ்கனகராஜ். 'மாமன்னன்' படம் திரையரங்குகளில் வெளியான சமயத்தில் எந்தளவு பேச்சுக்களை கிளப்பியதோ, அதே அளவிற்கு தற்போது ஓடிடியிலும் வெளியாகி பல விவாதங்களை கிளப்பியுள்ளது. இதனால் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் டாப் டிரெண்டிங்கில் உள்ளது இந்தப்படம். பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ் தனது மூன்றாவது படைப்பாக 'மாமன்னன்' படத்தினை இயக்கியுள்ளார்.நகைச்சுவை நடிகரான வடிவேலு டைட்டில் ரோலில் நடித்த இந்தப்படத்தில் அவரது மகனாக அதிவீரன் கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின், ரத்னவேலுவாக பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ், லால், அழகம் பெருமாள் உள்ளிட்டோர் பலர் நடித்திருந்தனர்
காலம் காலமாக நடக்கும் சாதி அரசியல் குறித்து தோலுரிக்கும் விதமாக இந்தப்படத்தினை இயக்கி கவனம் ஈர்த்தார். அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பல தரப்பிலிருந்தும் இந்தப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தன. தனது முந்தைய படங்களை போல மாமன்னனையும் சமூக நீதி பேசும் படமாக இயக்கினார் மாரி செல்வராஜ். கடந்த 27 ஆம் தேதி 'மாமன்னன்' படம் ஓடிடியில் வெளியான பிறகு இந்தப்படத்தில் இடம்பெற்ற பகத் பாசிலின் வில்லன் கதாபாத்திரத்தை சில சாதியவாதிகள் கொண்டாடி வருகின்றனர்.
சாதி பெருமைகள் பேசும் பாடல்களை ரத்னவேல் கதாபாத்திரத்துடன் இணைத்து எடிட் செய்து வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். 'நான் தாமதமாக பார்ட்டிக்கு வந்துள்ளேன். 'மாமன்னன்' படம் அருமையாக உள்ளது. அனைத்து துறைகளிலும் நேர்த்தியான வேலைபாடுகள் தெரிகின்றன. படம் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை' என கூறியுள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் மற்றும் ஏஆர். ரஹ்மான் உள்ளிட்ட ஒட்டுமொத்த 'மாமன்னன்' படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தப் படத்தை முடிந்த கையுடன் கலையரசன், நிகிலா விமல் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் சிறுவர்களை மையப்படுத்திய படமான ‘வாழை’ படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளார் மாரி செல்வராஜ். மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தூத்துக்குடியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகும் இப்படம் கபடி வீரரான மனத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.