தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தமிழகத்தில் இருக்கும் மறைமுக தடையை நீக்க கோரியும், இப்படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு மேற்கு வங்க அரசு தடை விதித்ததையும் எதிர்த்து மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் தயாரிப்பாளர் விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள படம்‘தி கேரளா ஸ்டோரி.' கேரளாவில் இந்துப் பெண்களை இஸ்லாம் மதத்துக்கு மதம் மாற்றுகின்றனர்; அப்படி மதம் மாற்றப்படுகின்ற பெண்கள், ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களின் பாலியல் அடிமைகளாக்கப்படுகின்றனர் என்பதாக தி கேரளா ஸ்டோரி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் பொய்யான புனைவுகளின் அடிப்படையிலானது என்றும் இரு மதப் பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டது என்றும் கூறி இப்படத்தை திரையிடுவதற்கு நாடுமுழுவதும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன.
தமிழ்நாட்டில் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த போதும் தமிழ்நாடு அரசு இப்படத்திற்கு தடைவிதிக்கவில்லை. ஆனால் திரைப்படத்தை திரையிட்ட திரையரங்குகளுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் தமிழ்நாட்டில் திரையிடுவதை திரையரங்க உரிமையாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் இப்படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் திரையரங்க உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, திரைப்படத்தை தமிழக அரசு மறைமுகமாக தடை செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் படத்தின் தயாரிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, தடைக்கு எதிராக படத்தின் தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் சான்றளித்த பிறகு, மாநில அரசுகள் தடை விதிக்க அதிகாரம் இல்லை என்றும், தடை விதிக்க சட்டம் ஒழுங்கை காரணம் காட்ட முடியாது என கூறப்பட்டுள்ளது. இம்மனு வரும் 15-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.