‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தமிழக அரசு மறைமுக தடையா? - உச்சநீதிமன்றத்தில் விளக்கம்

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தைப் பார்க்க பொதுமக்கள் யாரும் ஆர்வம் காட்டி விரும்பி செல்லவில்லை
‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தமிழக அரசு மறைமுக தடையா?  - உச்சநீதிமன்றத்தில் விளக்கம்

தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தமிழகத்தில் இருக்கும் மறைமுக தடையை நீக்க கோரியும், இப்படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

பாலிவுட் தயாரிப்பாளர் விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள படம்‘தி கேரளா ஸ்டோரி’. கேரளாவில் இந்துப் பெண்களை இஸ்லாம் மதத்துக்கு மதம் மாற்றுகின்றனர், அப்படி மதம் மாற்றப்படுகின்ற பெண்கள், ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களின் பாலியல் அடிமைகளாக்கப்படுகின்றனர் என்பதாக தி கேரளா ஸ்டோரி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் பொய்யான புனைவுகளின் அடிப்படையிலானது என்றும் இரு மதப் பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டது என்றும் கூறி இப்படத்தை திரையிடுவதற்கு நாடுமுழுவதும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன.

தமிழ்நாட்டில் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த போதும் தமிழ்நாடு அரசு இப்படத்திற்கு தடைவிதிக்கவில்லை. ஆனால் திரைப்படத்தை திரையிட்ட திரையரங்குகளுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் தமிழ்நாட்டில் திரையிடுவதை திரையரங்க உரிமையாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் இப்படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் திரையரங்க உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, திரைப்படத்தை தமிழக அரசு மறைமுகமாக தடை செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் தமிழகத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் படத்தின் தயாரிப்பாளர் கோரிக்கை விடுத்திருந்தனர். மேற்கு வங்கத்தில் இப்படைத்தை திரையிட அரசு விதித்திருந்த தடையையும் நீக்க கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை கடந்த 12ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த திரைப்படம் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கும், மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், "தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படவில்லை. மாநிலம் முழுவதும் மொத்தம் 19 திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது. அந்த திரையரங்குகளுக்கு காவல்துறையின் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இருப்பினும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தைப் பார்க்க பொதுமக்கள் யாரும் ஆர்வம் காட்டி விரும்பி செல்லவில்லை. அதனால் திரையரங்குகளில் அந்த படத்தை நீக்கி விட்டு வேறு படத்தை திரையிடுகிறார்கள். அதனால் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலையீடு எந்த இடத்திலும் இல்லை” என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com