இராவணக்கோட்டம் திரைப்படம் குறித்து திருமாவளவன் மிகச்சிறப்பாக விவரித்துள்ளார். அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என இயக்குநர் விக்ரம் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் இராவணக்கோட்டம் திரைப்படத்தில் நடிகர் சாந்தனு கதாநாயகனாகவும், நடிகர்கள் பிரபு, இளவரசு, நடிகை கயல் ஆனந்தி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பது போன்ற கதைக்களத்தைக் கொண்டு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளிவந்த ’மதயானைக்கூட்டம்’ விமர்சன ரீதியில் வரவேற்பை பெற்றாலும், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைத் தூக்கிப்பிடித்துப் படம் எடுத்திருப்பதாகச் சினிமா விமர்சர்களால் கருத்து கூறப்பட்டது.
இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் இராவணக்கோட்டம் திரைப்படம் மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
ராமநாதபுரத்தில் நடந்த சம்பவத்தைப் பின்புலமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இரு சமூகத்தினரிடையே சாதி மோதலை ஏற்படுத்தும் இத்திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும் என சில சமுதாய அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் படம் எந்த ஒரு சமூகத்தையும், இனத்தையும் குறிப்பிட்டு எடுக்கப்படவில்லை எனத் திரைப்படக் குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் வி.சி.க தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் இராவணக்கோட்டம் திரைப்படத்தைச் சென்னை நுங்கம்பாக்கத்தில் பார்த்தார். பின்னர் பேசிய அவர், ”விக்ரம் சுகுமாரன் இரண்டு வெவ்வேறு சமூகங்களுக்கு இடையேயான பிரச்னைகளைப் படமாக்கி இருக்கிறார். ஆனால் ஒரு சார்பு இல்லாமல், யார் எந்தச் சமூகம் என்று வெளிப்படுத்தாமல் அதே வேளையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான் என்பதை உணர்த்தக்கூடிய வகையில் மிக லாபகமாக உருவாக்கி உள்ளார். மிக கவனமாக வசனங்களையும், காட்சி பதிவுகளையும் நேர்த்தியாக படமாக்கி உள்ளார் என்று பாராட்டு தெரிவித்தார்.
இதற்குப் பதில் அளித்துள்ள விக்ரம் சுகுமாரன், ”திருமாவளவனுக்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன். என்னால் விளக்கம் அளிக்க முடியாத சூழல் இருந்தது. திருமாவளவன் மிகச்சிறப்பாகப் படம் குறித்து விவரித்துள்ளார்” என்றார்.