மலையாள திரையுலகில் மட்டுமல்லாமல் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் ஃபஹத் பாசில். யார் படம் ஓடினாலும் ஹீரோ நான் தான் என்பதை போல ஃபஹத் பாசில் வில்லனாக நடித்தாலும் அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தில் ரத்னவேலு என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஃபஹத் பாசில். இவரின் அருமையான நடிப்பை பார்த்து ரசிகர்கள் இவர் தான் படத்தின் ஹீரோ என்பதை போல கொண்டாடி தீர்த்தனர். அந்த அளவுக்கு தன் நடிப்பால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றார் ஃபஹத் பாசில்.
ஃபஹத் ஃபாசில் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை முறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன். மிகச் சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர். அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார்!” என்று மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார்.
பகத் பாசிலை மலையாளப் படங்களில் பார்க்கிற போதெல்லாம் இப்படி ஒரு கலைஞன் தமிழுக்கு வரமாட்டானா என்று நினைத்துக்கொண்டிருப்போம் . நீங்கள் அவரையே தமிழுக்குக் கூட்டிக்கொண்டு வந்துவீட்டீர்கள்! நன்றியும் வாழ்த்துக்களும் என்று திரையுலகைச் சேர்ந்தவர்களும் , ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.