நடிகர் ரஜினிகாந்த் சொந்த கிராமத்திற்கு வருகை தந்து தனது தாய், தந்தை மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிக்குப்பம் என்ற கிராமம் தான் நடிகர் ரஜினிகாந்தின் சொந்த ஊர்.இந்த நிலையில், இன்று இந்த ஊருக்கு தனது உடன் பிறந்த அண்ணன் சத்தியநாராயணராவுடன் இணைந்து திடீர் வருகை தந்த நடிகர் ரஜினிகாந்த் தங்களுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள பெற்றோர் நினைவு மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் நாச்சிக்குப்பம் கிராமத்தில் நடிகர் ரஜினிகாந்த் உறவினர்களை சந்தித்து நலம் விசாரித்து பின்னர் அவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். தற்போது இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
மேலும் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் தான் பணிபுரிந்த பஸ் டிப்போவிற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் அங்குள்ள ஊழியர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன்பின்னர் பெங்களூரில் உள்ள தனது அண்ணன் சத்தியநாராயண ராவ் வீட்டில் ஓய்வெடுத்தார்.
பின்னர் இன்று காலை சாலை மார்க்கமாக காரில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டார். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த நாச்சிக்குப்பம் தனது பூர்வீக கிராமத்திற்கு சென்று பெற்றோர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு தனது அண்ணனுடன் நடிகர் ரஜினிகாந்த் சொந்த கிராமத்திற்கு வருகை புரிந்தது கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
-பொய்கை கோ.கிருஷ்ணா