நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி(66) பழம்பெரும் தயாரிப்பாளர் எம்.ஆர்.சந்தானத்தின் மகன். மேலும் இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் சகோதரராவார். நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து விக்ரம், மைக்கேல் மதன காம ராஜன், மை டியர் மார்த்தாண்டம், குணா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆர்.எஸ்.சிவாஜி.
சமீபத்தில் வெளியான "கார்கி" திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் ஆர்.எஸ்.சிவாஜி கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது, அந்த கதாபாத்திரத்திற்காக அவரை பலரும் பாராட்டினார். கமல் ஹாசனின் நண்பராக அறியப்படும் இவர் கமலுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் பல ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் திரைப்பட துறையில் உதவி இயக்குநர், சவுண்ட் டிசைனர் என பல்வேறு துறைகளில் பணிபுரிந்துள்ளார் ஆர்.எஸ்.சிவாஜி
இந்நிலையில் திடீரென்று மாரடைப்பு காரணமாக ஆர்.எஸ்.சிவாஜி இன்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.