தமிழ், கன்னடம், தெலுங்கு திரையுலகின் குணசித்தர நடிகராக இருப்பவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் சில கருத்துகள் சர்ச்சையாகி வருகிறது.
இந்த நிலையில், அவர் சந்திரயான் -3 திட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், பிரேக்கிங் நியூஸ் என்று பதிவிட்டு வாவ்.. விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து அனுப்பிய முதல் புகைப்படம் இது என்று குறிப்பிட்டு ஒருவர் டீ ஆற்றுவது போன்ற கார்ட்டூன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சந்திரயான் - 3 திட்டம் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ் மீது கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம், பனகட்டி போலீசில் இந்து அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.
இதேபோல் விஞ்ஞானி குறித்து கேலி சித்தரம் வெளியிட்டதாக பிரகாஷ் ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாட்டிலும் நாடார் அமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.