அஜித் குமாரின் ’விடாமுயற்சி’ திரைப்படத்தை லைகா நிறுவனம் கைவிட்டதாக தகவல் வெளியான நிலையில், புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் லைகா தயாரிப்பில் ’விடாமுயற்சி’ திரைப்பட பணிகள் தொடங்கியது. பட ஷூட்டிங் கடந்த மே மாதம் தொடங்கும் என கூறப்பட்டது.
மே மாதம் அஜித்குமார் பிறந்தநாள் கொண்டாட்டத்தால் படப்பிடிப்பு தேதி தள்ளிப்போவதாக சொல்லப்பட்டது. பின்னர் ஜூன் மாதம் என்று ஜூலைக்கு தள்ளி போனது.
ஆனாலும், ஆகஸ்ட் மாதமும் முடிய உள்ள நிலையில், படப்பிடிப்பு இன்னும் தொடங்காததால், விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் கைவிட்டு விட்டதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.
இதுகுறித்து அஜித் ரசிகர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் நிலையில்,ப்ரீ ப்ரொடெக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், படப்பிடிப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
’விடாமுயற்சி’ படப்பிடிப்பு அக்டோபர் மாதத்திற்குள் தொடங்க மகிழ்திருமேனி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பாக நடிகர் அஜித் குமார் வெளிநாடுகளில் பைக் டூர் சென்றுள்ளார்.
’விடாமுயற்சி’ படப்பிடிப்பை துவங்கிவிட்டால் விறுவிறுப்பாக பணிகளை முடித்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறையின் போது, படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஜித் குமார் அண்மையில் ஜெர்மனி, நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு சென்றார். அதே நேரம் நடிகர் விஜய்யும் நார்வேக்கு சென்றிருந்தார். அங்கு இருவரும் சந்தித்து பேசினார்களா? என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் நடிகர் அஜித்குமாரை வைத்து இயக்குநர் வெங்கட் பிரபு ’மங்காத்தா’ படம் எடுத்திருந்த நிலையில், தளபதி 68-ல் நடிகர் விஜய்யுடன் வெங்கட் பிரபு இணைய உள்ளார். இதனால் அஜித்தை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைப்பதற்கான பணிகளும் ஒருபுறம் நடந்து வருவதாக கூறப்படுக்கிறது.
இந்த நிலையில், ’விடாமுயற்சி’ திரைப்படம் கைவிடப்படவில்லை என்றும் விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.