நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக புது அவதாரம் எடுத்திருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிப்பில் தனது முதல் படத்தை இயக்கவுள்ளார் ஜேசன் சஞ்சய். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா நிறுவனம்.
ஜேசன் சஞ்சய் கடந்த 2018-2020ல் டொராண்டா ஃபிலிம் ஸ்கூலில் திரைப்பட தயாரிப்பு தொடர்பான டிப்ளோமா படிப்பை படித்துள்ளார். அதை தொடர்ந்து 2020-2022ல் BA (Hons) திரைக்கதை எழுதவதில் 2 வருட ஃபாஸ்ட் டிராக் படிப்பு படித்துள்ளார். முன்பே ஜேசன் சஞ்சய் குறும்படம் இயக்கியது யூட்யூபில் வெளியானது. அப்போதிலிருந்தே அவர் இயக்குநராக வலம் வருவார் என்று பெரிதும் பேசப்பட்டது.
இந்நிலையில் இந்த அறிவிப்பு தொடர்பாக ஜேசன் சஞ்சய் கூறுகையில், "நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன் எனது முதல் படத்தை இவ்வளவு பெரிய தயாரிப்பு நிறுவனம் ஏற்றுகொண்டு படம் பண்ணுவதை ஒப்புகொண்டதில் மகிழ்ச்சியாக உள்ளது. சுபாஷ்கரன் அவர்களுக்கு எனது கதை பிடித்து போனது, அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.
அது மட்டுமல்லாது இந்த வாய்ப்பு தந்த சுபாஷ்கரன் அவர்களுக்கு நன்றி. நிச்சயமாக எனது சிறந்த படைப்பாய் அவர்களுக்கு என் திரைப்படத்தின் மூலம் கொடுப்பேன். தமிழ் குமரன் அவர்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இயக்குநராக வேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்ற ஒரு பெரும் தூணாக இருந்து எனக்கு ஆதரவு கொடுத்துள்ளார் தமிழ் குமரன்" என்று பேசியுள்ளார்.
அதை தொடர்ந்து தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பேசுகையில், "லைகா நிறுவனம் எப்போதும் துடிப்பான, திறமையான இளைஞர்கள் மீது பெரும் நம்பிக்கை கொண்டுள்ளது. அது போல தான் ஜேசன் சஞ்சய் மீதும் எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது.
அவரது கதை நாங்கள் கேட்டோம், மிகவும் அருமையாக இருந்தது. எங்களுக்கு திருப்திகரமான ஒரு கதையாக இருந்தது. ஜேசன் சஞ்சய் திரைக்கதை, இயக்கம் இதில் திறமையானவர் என்பது எங்களுக்கு தெரியும். அவருடன் பணிபுரியப்போகும் காலத்தை மிகவும் ஆவலோடு எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.