பெங்களூருவில் பஸ் டிப்போவுக்கு திடீர் விசிட் அடித்த ரஜினிகாந்த் - ஊழியர்கள் நெகிழ்ச்சி

தான் பணியாற்றிய நினைவலைகளை ஊழியர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்துக்கொண்டார்.
நடிகர் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பஸ் டிப்போ ஊழியர்கள்
நடிகர் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பஸ் டிப்போ ஊழியர்கள்

பெங்களூருவில் தான் பணியாற்றிய போக்குவரத்து கழக டிப்போவுக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீர் விசிட் செய்து, அங்குள்ள ஊழியர்களுடன் உரையாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ’ஜெயிலர்’ படம் வெளியாவதற்கு முந்தைய நாள் இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டார். அங்கு பாபாஜி குகை, அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சாமி தரிசனம் செய்து விட்டு சென்னை திரும்பினார்.

இதனிடையே, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசி பெற்றது பேசு பொருளானது.

இதுகுறித்து விளக்கம் அளித்த ரஜினிகாந்த், ”வயதில் சிறியவர்களாக இருந்தாலும் யோகிகள், சந்நியாசிகள் காலில் விழுவது எனது பழக்கம்.அதைத்தான் நான் செய்தேன். பயணத்தின் போது அரசியல் தலைவர்களை நட்பு ரீதியாகவே சந்தித்தேன்.அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க விரும்பவில்லை” என கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

இந்த நிலையில், பெங்களூருவில் தான் பணியாற்றிய ஜெயநகர் பேருந்து டிப்போவிற்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றார். அங்கு பணிபுரியும் ஊழியர்களை சந்தித்து உரையாடினார். தாம் பணியாற்றிய நினைவலைகளை அவர்களிடம் பகிர்ந்து கொண்டார். பின்னர் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். ரஜினியை திடீரென பார்த்த ஊழியர்கள் நலம் விசாரித்தனர். மேலும் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். சிலர் ரஜினி காலில் விழுந்து ஆசி பெற்றனர். ரஜினியின் இந்த திடீர் விசிட்டால் ஜெயநகர் பேருந்து டிப்போ பரபரப்பாக காணப்பட்டது.

இதுதொடர்பான படங்களை பகிர்ந்த ரசிகர்கள் தலைவர் எப்போதுமே, ‘பழச மறக்காதவர்’ என சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com