நடிகர் அஜீத் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் கைகளைப் பயன்படுத்தாமல் தலையில் பிரஷ் பொருத்தியும் , கோலமாவைக் கொண்டு 12 அடி உயரத்தில் கோலமிட்டும் அசத்தியுள்ளனர் இருவர்.
புதுச்சேரி மாநிலம், முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் ஓவிய பெண் அறிவழகி. ஓவியரான இவர் தேச தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளின் போது அவர்களுடைய உருவத்தைத் தத்ரூபமாகக் கோலமாவுகளைக் கொண்டு ரங்கோலியாக வரைந்து அசத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் காந்தியடிகள், டாக்டர் அப்துல் கலாம், சச்சின் டெண்டுல்கர், தோணி ஆகியோரின் உருவங்களையும் ரங்கோலியாக வரைந்து அசத்தியுள்ளார். அந்த வகையில் மே 1-ம் தேதியான இன்று நடிகர் அஜீத்குமாரின் பிறந்தநாளையொட்டி தனது வீட்டில் 12 அடி உயரம் 8 அடி அகலத்தில் 4 கிலோ வண்ண கோலமாவு கொண்டு அஜீத்குமாரின் உருவத்தைத் தத்ரூப ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார். சுமார் 5 மணி நேரமாக ரங்கோலியாக வரைந்து அசத்தி பிறந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த மணலூர் பேட்டை சேர்ந்த ஓவியர் சு.செல்வம், நடிகர் அஜீத்குமார் பிறந்தநாள் முன்னிட்டு பிறந்தநாள் வாழ்த்துக் கூறும் விதமாக கைகள் பயன்படுத்தாமல் தன்னுடைய தலையால் அஜீத் படத்தை வரைந்து அசத்தியுள்ளார். ரசிகர்கள் மனதில் 'தல' என்று அன்போடு நிலைத்திருப்பவர் (தல) என்பதைக் குறிக்கும் விதமாக ஓவியர் செல்வம் கைகள் பயன்படுத்தாமல் சிறு கம்பியில் வளையம் செய்து, அதில் பிரஷ் பொருத்தி தன்னுடைய தலையில் மாட்டிக் கொண்டு 15 நிமிடங்களில் அஜீத் படத்தை வரைந்துள்ளார்.