'M.G.R. பெயரைச் சொல்லி பதவிக்கு வந்தவர்கள் அவரை மறந்தபோதும் மயில்சாமி மறக்கவில்லை' - இயக்குநர் பேரரசு நெகிழ்ச்சி

'M.G.R. பெயரைச் சொல்லி பதவிக்கு வந்தவர்கள் அவரை மறந்தபோதும் மயில்சாமி மறக்கவில்லை' - இயக்குநர் பேரரசு நெகிழ்ச்சி
'M.G.R. பெயரைச் சொல்லி பதவிக்கு வந்தவர்கள் அவரை மறந்தபோதும் மயில்சாமி மறக்கவில்லை' - இயக்குநர் பேரரசு நெகிழ்ச்சி

வாழ்நாளில் நல்ல மனிதர்களை சம்பாதித்தால் அதுதான் உண்மையான சொத்து

'எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லி, அமைச்சர் மற்றும் முதலமைச்சர் என பதவிக்கு வந்தவர்கள் எல்லாம் அவர் பெயரை சொல்லவே மறந்து விட்டபோதும், தனது உயிர் உள்ளவரை மயில்சாமி மறக்கவில்லை' என இயக்குநர் பேரரசு கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை நடிப்பாலும் பிறருக்கு உதவி செய்யும் குணத்தாலும் தனித்துவமான மதிப்பை பெற்றிருந்தவர் நடிகர் மயில்சாமி. அண்மையில் ஏற்பட்ட அவரது திடீர் மரணம் எல்லோருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தனது மரணத்திற்கு முன்பாக "விளம்பரம்" என்கிற குறும்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

ரேகா நாயர் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த குறும்படத்தை A.ராகுல் என்பவர் இயக்கியுள்ளார். அவர் தந்தையான அசோக்குமார் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார். இன்று இந்த குறும்பட வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில், படக்குழுவினருடன் இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் மற்றும் மயில்சாமியின் மகன் அன்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குறும்பட குழுவினரை பாராட்டியதுடன், நடிகர் மயில்சாமி குறித்த தங்களது நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது, பேசிய இயக்குனர் பேரரசு, “வாழ்நாளில் நல்ல மனிதர்களை சம்பாதித்தால் அதுதான் உண்மையான சொத்து. அப்படிப்பட்ட நல்ல மனிதர்களை சம்பாதித்தவர் தான் மயில்சாமி. எஸ்.பி.பி., விவேக், அந்த வரிசையில் மயில்சாமியின் மரணம் நம்மிடம் மிகப்பெரிய தாக்கத்தையும், இழப்பையும் ஏற்படுத்திவிட்டது. நம் வீட்டிலேயே ஒரு துக்கம் நடந்தது போன்ற உணர்வை தந்தன. 

மயில்சாமி ஒரு சிவ பக்தர் மட்டுமல்ல. அவர் தீவிரமான எம்.ஜி.ஆர். பக்தரும் கூட. ஆனால், அந்த இருவருக்குமே அவர் உண்மையாக இருந்தார். எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லி முதலமைச்சர், அமைச்சர் என பதவிக்கு வந்தவர்கள் எல்லாம் பின்னால் அவர் பெயரை சொல்லவே மறந்து விட்டார்கள். 

ஆனால், தான் இறக்கும் வரை எம்.ஜி.ஆரின் உண்மை தொண்டனாகவே அவர் வாழ்ந்து மறைந்தார். அதுமட்டுமல்ல, தான் நடித்த கடைசி படத்தில் கூட மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாகவே நடித்துவிட்டு சென்றுள்ளார். 

முதல் படத்திலேயே சமுதாயத்திற்கு தேவையான விஷயங்களை சொன்ன இயக்குனர் என இந்த குறும்பட இயக்குனர் ராகுல் தனது நெஞ்சை நிமித்தி அமரலாம். விளம்பரத்தில் நடிக்கும்போது நடிகர் நடிகைகளுக்கு பொறுப்பு வேண்டும். காரணம் மக்கள் உங்களை நம்புகிறார்கள். 

முதலில் நீங்கள் நடிக்கும் விளம்பரம் குறித்த உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். அந்த பொருளை ஒரு மாதம் வரை நீங்கள் முதலில் பயன்படுத்தி பார்க்க வேண்டும். சரியில்லாத ஒன்றை சரி என நம்மை நம்பும் மக்களிடம் கொடுப்பது நம்பிக்கை துரோகம்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com