பாண்டிராஜ் இயக்கத்தில், விஷால் நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில், விஷால் நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், அடுத்ததாக சிவகார்த்திகேயனும், பாண்டிராஜும் இணையவிருப்பதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், அவருக்கும் பாண்டிராஜுக்கும் நிகழ்ந்த சிறு கருத்து வேறுபாட்டால் தற்போது அந்தப் படத்தில் விஷால் நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்த ‘கதகளி’ எனும் படம் வெளியானது. அந்தப் படம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் இந்தக் கூட்டணி புதிய படத்திற்காக இணையவுள்ளது. மேலும், சிவகார்த்திகேயனை ‘மெரினா’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது பாண்டிராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.