ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கவிருக்கிறார். அதற்கான படப்பிடிப்பில் விரைவில் இணைவார்.
தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குநராகத் திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். வெற்றி மாறனுக்கு பிறகு இயக்கிய அனைத்துப் படங்களையும் வெற்றிப் படங்களாக ஆக்கியவர் இவர் மட்டுமே. ‘LCU' என்கிற லோகேஷ் யுனிவெர்ஸ் என தமிழ் சினிமாவில் சில புதிய முயற்சிகளையும், விஷயங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார். தற்போது கோலிவுட்டின் மிகப்பெரியதாக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான விஜய்யின் ‘லியோ’ படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார். இந்நிலையில், இவர் தற்போது நடிப்பில் களமிறங்கப்போவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கவிருப்பதாகவும், அதற்கான படப்பிடிப்பில் விரைவில் இணைவார் எனவும் பேசப்படுகிறது. இந்தப் படத்தை‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ஜுங்கா’ , ‘காஷ்மோரா’ போன்ற படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.
லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு அவர் இயக்கிய ‘மாஸ்டர்’ படத்தின் கிளைமாக்ஸில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே திரையில் வருவார். அதைத் தொடர்ந்து தற்போது ‘சிங்கப்பூர் சலூன்‘ படத்தில் முழு நேர முக்கிய கதாபாத்திரத்திலேயே நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவர் இந்தப் படத்தின் தயாரிப்பிலும் பங்குவகிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.