நடிப்பதிலும் பாடல் பாடுவதிலும் ஆர்வம் காட்டி வந்த ஸ்ருதிஹாசன் தற்போது தன் தந்தையை போல் எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘வீர சிம்ஹா ரெட்டி’, சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ’வால்டர் வீரய்யா’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் ஊடகங்களிடம் பேசும்போது தனக்கு திரைக்கதை எழுதுவதிலும், கதை சொல்லல் கலையிலும் மிகுந்த ஆர்வம் தனக்கு என்றைக்கும் இருந்து வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், ஒரு நல்ல ஸ்கிரிப்டை எழுதி அதை மக்களுக்கு அளிப்பது தன் கனவாகவே உள்ளதாகவும், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமெனவும் தெரிவித்தார். தற்போது ஸ்ருதி ஹாசன், பிரபாஸ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் ‘சலார்’ படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது முதல் ஹாலிவுட் படமான ‘தி ஐ’ படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.