மதுரையில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை சரியாக 10 மணிக்கு தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் 2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முறைப்படி தாக்கல் செய்தார்.
பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாசிக்க ஆரம்பித்ததும், மதுரையில் சில நாட்களுக்கு முன்பு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்து, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து தொடர் முழக்கங்களை எழுப்பினர்.
அவ்வாறு கண்டன முழக்கங்கள் எழுப்பிய அ.தி.மு.க. உறுப்பினர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, "நிதி அமைச்சர் பட்ஜெட் உரை வாசித்துக் கொண்டுள்ளார்.
அவர் உரையை முடித்த பின்னர் உங்கள் கோரிக்கைகளை என்னிடம் கூறுங்கள். அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளேன்" என்று தெரிவித்தார். ஆனால், இதைக்கேட்காமல் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால், சபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.