இருக்கை ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட முழு அதிகாரம் சபாநாயகர் வசமே உள்ளது
தமிழ்நாடு சட்டப்பேரவையில், பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில், அ.தி.மு.க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகள் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.கவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சி துணைத் தலைவராக அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், எனவே, உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகர் அப்பாவுக்கு காேரிக்கை விடப்பட்டு, கடிதமும் கொடுக்கப்பட்டது.
ஆனால், இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏமாற்றம் அடைந்தது.
அதேபோல, அண்மையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், தி.மு.க. கூட்டணிக்கட்சி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்று, சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்பு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், இளங்கோவனுக்கு பேரவையில் 177வது இடத்தில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட இளங்கோவன், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது, அவர் கூட்டத்தொடரில் பங்கு பெற்றது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
தமிழக சட்டபேரவையில் இருக்கை ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட முழு அதிகாரம் சபாநாயகர் வசமே உள்ளது. சபாநாயகர் முடிவில் யாரும் தலையிடமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.