எது ட்விஸ்ட்டு...?

எது ட்விஸ்ட்டு...?

சினிமா கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து அது பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில்நுட்ப ரீதியாகவும் சரி, அதனின் வடிவத்திலும் சரி, அது அணுகப்படும் விதத்திலும் சரி. இப்படியிருக்க, ஒரு கதையை, அல்லது திரைக்கதையை சுவாரஸ்யமாகச் சொல்வதற்கு அடிப்படையாகவே அந்தக் கதையிலோ அல்லது திரைக்கதையிலோ சில திருப்பங்கள் தேவைப்படுகிறது. சினிமாவில் திரைக்கதையில் திருப்பம் இருக்க வேண்டியது அத்தியாவசியமா என்று கேட்டால், சினிமாவிற்கென எந்த வித தனி இலக்கணமும் இல்லை என்பதே உண்மை. ஆனால், அது எந்த அளவிற்கு கலைத்துவமாகக் கையாளப்படுகிறது என்பது அவசியம். இது ஒரு பக்கம் இருக்க, விறுவிறுப்பான கிரைம் த்ரில்லர், சஸ்பென்ஸ் த்ரில்லர், சைக்கோலாஜிக்கல் த்ரில்லர் ஜானர்களில் நிச்சயம் இந்த ‘ட்விஸ்ட்டு’ என்கிற விஷயத்தைத் தவிர்க்க முடியாது. 

சமீபத்தில் மலையாளத்தில் அறிமுக இயக்குநர் ரோஹித் எம்.ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் ஜோஜி ஜார்ஜ் நடிப்பில் வெளியான ’இரட்டா’ என்கிற திரைப்படத்தைக் கண்டேன். மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட ஒரு கிரைம் த்ரில்லர் திரைப்படம். ஒரு அறிமுக இயக்குநர் இப்படியொரு படத்தை எடுத்திருப்பார் என எவரும் எண்ணிருக்க முடியாது. முக்கியமாக இந்தப் படத்தின் உச்சகட்டமே இதனின் கிளைமாக்ஸ் காட்சியின் ட்விஸ்ட்டு தான். இந்த ட்விஸ்ட்டு தற்போது பலரால் பேசப்பட்டு வருகிறது. பொதுவாக இப்படி கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டை நம்பி எடுக்கப்படும் சினிமா ஏராளம் உண்டு. ஒரு வகை கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டை மட்டும் நம்பி எடுக்கப்படும் திரைப்படங்கள். மற்றொன்று கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டையும் முக்கியமாக வைத்திருக்கும் திரைப்படங்கள். 

இதில், கன்னடத்தில் இயக்குநர் தயால் பத்மநாபன் இயக்கத்தில் உருவான ‘ஆ கரால ராத்திரி’ திரைப்படம் முதல் வகையைச் சேர்ந்தது. இந்தப் படம் முக்கியமாக பெரிதாய் நம்பியிருந்தது இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டைத் தான். அந்த ட்விஸ்ட்டு படத்தின் இறுதி கட்டத்தில் வரும். இருப்பினும் அது வருவதற்காக அவர்கள் அளித்த முந்தய பில்டப் காட்சியிலேயே எனக்கு இதுதான் ட்விஸ்ட்டாக இருக்குமோ என்கிற எண்ணம் தோன்றிவிட்டது. மேலும், இந்தப் படத்தில் அவர்கள் வைத்த ட்விஸ்ட்டு, நிச்சயம் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியைத் தரலாம். அந்தக் கதைகளுக்குள்ளான கதாபாத்திரங்களுக்கும் அது ஒரு பேரதிர்ச்சி தான். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்தத் திரைப்படம் ஒரு நீதிக் கதையைப் போலத் தான் நிறைவடையும்.

ஏறத்தாழ இதே மாதிரியான ஒரு அதிர்ச்சிகரமான ட்விஸ்ட்டு தான் ‘இரட்டா’ திரைப்படத்திலும் நடந்தேறும். ஆனால் இந்தப் படம் நான் மேலே சொன்னதில் இரண்டாவது வகையில் வருகிறது. இந்தப் படத்தின் ட்விஸ்ட்டு நம்மை வந்தடையும் போது நமக்கு வரும் அதிர்ச்சியை விட, அதற்குப் பிறகு அந்த மையக் கதாபாத்திரத்தின் மனதிற்குள் சில எண்ணங்கள் ஓடும், அதை காட்சிவழியில் மிக அழுத்தமாக அணுகிருப்பார் இயக்குநர். அதை நாம் காணும் போது தான் நமக்கே பேரதிர்ச்சி ஏற்படும். மேலும், இந்தத் திரைப்படம் ஒரு நீதிக்கதை போல் முடியாது. காரணம் இந்தத் திரைப்படம் கையாளப்பட்ட விதம். பல விஷயங்களை சரியான காட்சி மொழியிலும், திரை வடிவிலும் கடத்தியிருந்ததால், இந்தப் படம் நிறைவடையும் போது வெறுமென ‘So the Moral of the story is...' என்பது போல் நிறைவடையவில்லை. மாறாக அந்தத் திருப்பம் நமக்குள்ளேயே நிகழ்ந்துவிட்டது, நம்முள்ளே அது பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. 

இது போன்ற கிளைமாக்ஸ் காட்சிகள் பல திரைப்படங்களில் கையாளப்பட்டுள்ளன. கன்னடத்தில் இயக்குநர் அஷோக் இயக்கத்தில் உருவான ‘டியா’ திரைப்படத்தில் எவரும் அதுவரை எதிர்பார்த்திராத ஒரு அதிர்ச்சிகரமான கிளைமாக்ஸ் காட்சி இருக்கும். பலரும் அதை விமர்சித்தும், பாராட்டியும் அப்போது எழுதியிருந்தார்கள். ஒரு படம் நிறைவடையும் வரை என்ன நடக்குமெனத் தெரியாமல் பார்வையாளர்களை வைத்துக்கொண்ட அந்த விஷயத்திற்காக வேண்டுமானால் இயக்குநர் அஷோக்கை பாராட்டலாம். ஆனால், ட்விஸ்ட்டு என்பது நம்மை வெறுமென அதிர்ச்சி மற்றும் ஆக்காமல், அதைத் தாண்டிய ஓர் தாக்கத்தை ஏற்படுத்தினால் அது மிக்க நேர்த்தியாக இருக்கும். 

உதாரணத்திற்கு இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான ’பிசாசு’. இந்தப் படத்தை நிச்சயம் மிஷ்கினின் மாஸ்டர் பீஸ் என்றே கூறலாம். இதில் வரும் கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டு நிச்சயம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். ஆனால், அதுவரை அந்தப் படம் நமக்கு கடத்தியிருந்த விஷயம், இந்தத் ட்விஸ்ட்டிற்குப் பிறகு நமக்கு இந்தத் திரைப்படம் கடத்தும் விஷயமென அனைத்தும் நம்மை பல கோணத்தில் சிந்தனை செய்யவிட்டு விடும். ஒரு பிசாசை உருவாக்கி அதற்காக நம்மை கண்ணீர் விட வைத்திருப்பார் மிஷ்கின். ‘jump scare’காட்சிகள், இருட்டில் இருந்து அளறி அடித்துக் கொண்டு பயம்படுத்தும் பேய்கள், தன்னைக் கொன்றவனை பலிவாங்க வரும் பேய்கள், என இப்படியான பேய்களைத் தான் நாம் அதுவரை தமிழ் சினிமாவில் கண்டிருப்போம். நமக்குத் தெரியாத, அல்லது நம்மைத் தாண்டிய எந்த ஒரு விஷயத்தையும் கோடூரமானதாகவே கற்பனை செய்துகொள்வது மனிதனின் எண்ணம் தான், அது பேயாக இருந்தாலும் சரி, வேற்றுகிரகவாசியான ஏலியனாக இருந்தாலும் சரி.

நாம் பல பலிவாங்கும் திரைப்படங்களை பார்த்திருப்போம். நான் பார்வையாளர்களை பலிவாங்கும் சிலத் திரைகாவியங்களைப் பற்றிச் சொல்லவில்லை. 'Revenge Drama' என்கிற ஜானரில் எடுக்கப்படும் திரைப்படங்களை பற்றி சொல்கிறேன். இது மாதிரியான திரைப்படங்களில் அந்த மையக் கதாபாத்திரம் எப்படியாவது அந்த வில்லன் கும்பலை பலி வாங்கி விடாதா என்று தோன்றும். பலி வாங்கியதும் நமக்குள்ளே ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும். அதைத் தான் ஆங்கிலத்தில் ‘chatarsis' என்று கூறுவார்கள். இதே பலிவாங்கும் ஜானர் திரைப்படங்களை வேறொரு கோணத்தில் அணுகிய திரைப்படங்களும் உண்டு. 

அதில் நான் முக்கியமாக பார்ப்பது இயக்குநர் கிம் ஜி வூன் இயக்கிய ‘i saw the devil', இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிய ‘பட்லாபூர்’, இயக்குநர் கீஸ்லோவ்ஸ்க்கி இயக்கிய ‘Three colours: white' இந்த மூன்று திரைப்படங்களிலும் பலிவாங்குதல் எங்கிற உணர்வு வேறுமாதிரியாக அணுகப்பட்டிருக்கும். எது பலிவாங்குதல்..?, பலி வாங்கிய பின் அந்த கதாபாத்திரத்தின் மனநிலை, குற்ற உணர்ச்சி, என பல உளவியல் ரீதியான விஷயங்களை இந்தப் படங்கள் பேசியிருக்கும். பலிவாங்கும் உணர்வைப் பற்றிய வேறு மாதிரியான புரிதலும், தாக்கமும் நம்முள் இந்தப் படங்களை கண்டு முடிக்கும்போது நிச்சயம் வரும். 

இப்படியாக சினிமாவில் ட்விஸ்ட்டு என்பது பல விதமாகக் கையாளப்படுகிறது. அது அடுத்தடுத்த அதிர்ச்சிகளும், ஆச்சரியங்களையும் தரும் ஒரு கண்கட்டி மேஜிக் ஷோவாக முடிகிறதா..?, அல்லது அந்தத் திருப்பத்தை நம்முள் நிகழும் திருப்பமாகிறதா என்பது அந்தப் படத்தின் எழுத்தாளரின் கையில் தான் உள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்