சம்பளப் பாக்கி; இருட்டடிப்பு; சட்டப் போராட்டம் - கலங்கும் இயக்குநர் கீரா

சம்பளப் பாக்கி; இருட்டடிப்பு; சட்டப் போராட்டம் - கலங்கும் இயக்குநர் கீரா
சம்பளப் பாக்கி; இருட்டடிப்பு; சட்டப் போராட்டம் - கலங்கும் இயக்குநர் கீரா

'இல்லாவிட்டால் தியேட்டரில் படம் ஓடாது' என நீதிமன்றம் எச்சரிக்கை

இன்று வெளியாகியுள்ள இரும்பன் படத்தை இயக்கிய கீராவுக்கு, 3 நாட்களுக்குள் அப்படத்தின் தயாரிப்பு நிர்வாகம் 15 லட்சம் ரூபாய் வழங்கவேண்டும், இல்லையெனில், திங்கட்கிழமை தியேட்டரில் படம் ஓடாது என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பச்சை என்கிற காத்து’, ‘மெர்லின்’, ‘எட்டுத்திக்கும் பற’ ஆகிய படங்களை இயக்கியவர் கீரா. இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இரும்பன்’ படம், இன்று திரையரங்குகளில் (மார்ச் 10) வெளியாகியுள்ளது. ஜூனியர் எம்.ஜி.ஆர். ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாக நடித்துள்ளார். யோகி பாபு காமெடியனாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் தனக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் கீரா. ‘3 நாள்களுக்குள் சம்பளப் பாக்கியை வழங்க வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், ‘என்னதான் பிரச்னை?’ என்று தெரிந்து கொள்வதற்காக கீராவிடம் பேசினோம்.

“ஜூனியர் எம்.ஜி.ஆர். நடிப்பில் ‘இரும்பன்’ படத்தைத் தொடங்கியபோது, படத்தின் தயாரிப்பாளரும் நான்தான். என்னுடன், தமிழ் பாலா என்பவரும் தயாரிப்பாளராகச் சேர்ந்து கொண்டார். இருவரும் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறைப்படி பதிவும் செய்துள்ளோம். 3 ஷெட்யூல்கள் படப்பிடிப்பு முடிந்தபிறகு, வினோத் என்பவர் இன்னொரு தயாரிப்பாளராக இந்தப் படத்தில் இணைந்தார்.

பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட ஒருசில காரணங்களால், அந்தச் சமயத்தில் தயாரிப்பாளர் பொறுப்பில் இருந்து நான் விலகிவிட்டேன். அதுவரைக்கும் படப்பிடிப்புக்காக நான் செலவுசெய்தது 10 லட்ச ரூபாய். இந்த படத்தை இயக்குவதற்கான எனது சம்பளம் 20 லட்ச ரூபாய். ஆக மொத்தம் எனக்கு 30 லட்ச ரூபாய் வரவேண்டும். இதில், 5 லட்ச ரூபாய் மட்டுமே முதலில் எனக்குத் தந்தனர். மீதம் 25 லட்ச ரூபாயில், 8 லட்ச ரூபாயை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிக்கொண்டேன். மீதத்தொகையில் ஒரு ரூபாயைக்கூட இதுவரைக்கும் தரவில்லை. இத்தனைக்கும் தமிழ் பாலா கஷ்டப்படுபவர் அல்ல. கோடிக்கணக்கில் அவருக்குச் சொத்து இருக்கிறது. அப்படி இருக்கும்போது என் சம்பளத்தைத் தராமல் இழுத்தடிப்பது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பியவர் தொடர்ந்து பேசினார்.

சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஷெட்யூல் முடியும்போதும் குறிப்பிட்ட தொகையைத் தந்துவிடுவது வழக்கம்.  ஆனால், இந்தப் படத்தில் அப்படி எனக்கு எதுவுமே தரவில்லை. சென்சார் முடிந்து கிட்டத்தட்ட 13 மாதங்களுக்குப் பிறகு இன்று படம் ரிலீஸாகியுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி வரைக்கும் எனக்கு சம்பளம் தருவார்கள் என நினைத்து, இசை வெளியீட்டு விழா தொடங்கி படம் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும் என்னுடைய பங்களிப்பைத் தந்தேன். சம்பளம் வரவில்லை என்றதும்தான், ஒன்றாம் தேதிக்குப் பிறகு நீதிமன்றம் மூலமாக நோட்டீஸ் அனுப்பினேன்.

அதுவரை என் பெயரை எல்லா இடங்களிலும் பயன்படுத்தியவர்கள், நான் நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியபிறகு ஒரு இடத்தில் கூட என் பெயரைப் போடவில்லை. போஸ்டர் தொடங்கி விளம்பரம் உள்ளிட்ட எல்லாவற்றிலுமே என் பெயரை இருட்டடிப்பு செய்துவருகின்றனர். ஆனால், இன்றைக்குப் படம் ரிலீஸாகிவிட்டது. நான் இன்னும் படம் பார்க்கவில்லை. படத்தில், ‘இயக்குநர்’ என என் பெயரைப் போட்டிருக்கிறார்களா எனத் தெரியவில்லை என்றவர்,

‘இன்று, நாளை மற்றும் ஞாயிறு என 3 நாட்கள் மட்டும் படம் தியேட்டரில் ஓடும். 3 நாட்களுக்குள் சம்பளப் பாக்கியான 15 லட்ச ரூபாயைத் தரவில்லை என்றால், திங்கட்கிழமை தியேட்டரில் படம் ஓடாது’ என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, எனக்கு விடிவுகாலம் பிறக்கும் என நம்புகிறேன்” என வேதனையுடன் தெரிவித்தார் கீரா.

- சி. காவேரி மாணிக்கம்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com