“பிளீஸ் வேறு எங்கும் என்னை கூட்டி செல்லாதீர்கள்.” என்று கதறும் இடம் கண்ணீரை வரவழைத்து விடுகிறது.
இந்தியாவில் தினமும் சராசரியாக 100 பெண்கள் கடத்தப்படுகிறார்கள். கடத்தப்படும் அனைவரும் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிறார்கள். பலர் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த உண்மையின் பின்னணியில் இருக்கும் கொடூரத்தை திரையில் சொல்லியிருக்கும் படம் தான் ‘இன் கார்’ - காருக்குள் நடப்பது…
மூன்று சமூக விரோதிகள், முதலில் ஒரு பெரியவர் ஓட்டி வந்த இனோவா காரை தேசிய நெடுஞ்சாலையில் துப்பாக்கி முனையில் கடத்துகின்றனர். பின்னர் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் ஒரு கல்லூரி மாணவியை பட்டப்பகலில் அதே காரில் கடத்துகின்றனர். அடுத்து அவர்கள் எங்கே செல்கின்றனர்? எதற்கு செல்கின்றனர்? காரை ஓட்டி வரும் முதியவர் யார்? அந்த இரண்டு மணி நேர பயணத்தில் மூவரும் அந்தப் பெண்ணை என்ன செய்தார்கள்? முடிவில் அந்தப் பெண் என்ன ஆனார்? முதியவர் என்ன ஆனார்? என்பதுதான் கதை.
கடத்தப்படும் பெண்ணாக ரித்திகா சிங் அற்புதமாக நடித்திருக்கிறார். காரின் பின் சீட்டில் இரண்டு காமுகர்களுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டு அவர் படும் அவஸ்தையை வெறும் படமாக நம்மால் பார்க்க முடியவில்லை.
போராடிக் களைத்த ரித்திகா சிங், “ இந்தக் காரிலேயே, எத்தனை பேர் வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் என்னை அனுபவியுங்கள். உங்கள் வெறி தீர்ந்ததும் இங்கேயே இறக்கி விட்டு விடுங்கள். நான் என் அப்பா அம்மாவிடம் கூட எதையும் சொல்ல மாட்டேன். பிளீஸ் வேறு எங்கும் என்னை கூட்டி செல்லாதீர்கள்.” என்று கதறும் இடம் கண்ணீரை வரவழைத்து விடுகிறது.
தன் மகள் வயதில் ஒரு பெண்ணை, தன் கண்ணெதிரில் சிலர் பச்சை பச்சையாகப் பேசி கேவலப்படுத்தி, செய்யக் கூடாதை எல்லாம் செய்வதைப் பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்தபடி காரை ஓட்டும் முதியவர் ஒரு முன்னாள் போலீஸ்காரர் என்பது நல்ல ட்விஸ்ட்.
ரவுடிகளாக வரும் மூன்று பேரும் நிஜமான காமக் கொடூரன்களாகவே தெரிகின்றனர். ஒரு காரிலேயே மொத்த படத்தையும் முடித்து விட்ட இயக்குநர் ஹர்ஷ்வர்தன் சாமர்தியசாலி தான்.
கடத்திய பெண்ணை காரில் வைத்து கொண்டே கடைக்கு போய் சரக்கு வாங்குவது, பெட்ரோல் போடுவது, நண்பணின் பண்ணைக்கு சாவகாசமாக போவது எல்லாம் நம்பும் படி இல்லை. பெண்களைக் கடத்துவதை வழக்கமாக வைத்திருக்கும் ரவுடி கும்பலுக்கு பெப்பர் ஸ்பிரே பற்றி தெரியாது என்பதெல்லாம் தில்லாலங்கடி...