அயோத்தி திரைப்பட விமர்சனம்
இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் சசிகுமார், புகழ், யஷ்பல் சர்மா, பிரீத்தி அஷ்ரானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’அயோத்தி’. ஆண்டுதோறும் அடுக்கடுக்காய் வெளியாகும் சசிகுமார் படங்களை நாம் சில ஆண்டுகளாகக் கண்டு வருகிறோம். பெரும்பாலும் கிராமத்து ஆள் கதாபாத்திரத்தில், படுசுமார் கதைகளிலேயே அவரைப் பார்த்து பழகிவிட்டோம். இந்நிலையில், ’அயோத்தி’ என்கிற ஒரு படம், எந்தவித ஆரவாரமின்றி இந்த வாரம் வெளியாகியிருந்தது. எந்த எதிர்பார்ப்புமின்றி தான் திரையரங்கம் சென்றேன். இப்படி சென்ற எனக்கு இத்திரைப்படம் அளித்த அனுபவத்தை எழுதுவதற்கு முன், முதலில் அயோத்தி படத்தின் களத்தை விவரிக்கிறேன்.
உத்தரப் பிரதேசத்திலிருந்து ராமேஸ்வரம் வரும் ஒரு குடும்பம், அதில் பிற்போக்கான ஆதிக்க குணம்கொண்ட தந்தை, அப்பாவி தாய், மகள், மகன் என அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருவதாகக் கதை தொடங்குகிறது. வந்த இடத்தில் தந்தையின் மூர்க்க குணத்தால், இக்குடும்பம் சாலை விபத்திற்குள்ளாகிறது. இந்த விபத்தால் இந்தக் குடும்பத்தை சந்திக்கும் சசிகுமார் பாதிக்கப்பட்ட இந்தக் குடும்பத்திற்கு எப்படி உதவி செய்கிறார், அதில் என்னென்ன தடங்கல்களை சந்திக்கிறார் என்பதே ‘அயோத்தி’ திரைப்படத்தின் கதை.
எவருக்கும் உதவி செய்யும் கதாபாத்திரம் சசிக்குமாருக்கு புதிதான கதாபாத்திரம் அல்ல. இருப்பினும் இந்தப் படத்தின் இயக்குநர் முழுக்க முழுக்க எதார்த்தமாக அக்கதாபாத்திரத்தை வடிவமைத்ததன் மூலம் அது சசிகுமாருக்கு பொருத்தமாகவும், ரசிக்கும்படியும் அமைந்துள்ளது. சசிகுமாரின் நண்பராக வரும் புகழுக்கு ஓர் குணச்சித்திர வேடம். அவர் காமெடியைத் தாண்டி இன்னும் நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள், கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்தால் நிச்சயம் ஒரு நல்ல குணச்சித்திர நடிகராகலாம். இதை எல்லாம் தாண்டி படத்தில் மிகச்சிறப்பான நடிப்பாக நாயகி பிரீத்தி அஷ்ரானி மற்றும் வட இந்திய தந்தையாக வரும் நடிகர் யஷ்பல் சர்மா ஆகியோரின் நடிப்பை நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும்.
குறிப்பாக ஓர் இடத்தில் பாஷை தெரியாத சசிகுமாரிடம் உதவி கேட்கும் காட்சியில் பிரீத்தி அஷ்ரானியின் நடிப்பு நிச்சயம் பாராட்டுக்குரியது. வட இந்தியத் தந்தையாக வரும் யஷ்பல் சர்மாவின் கதாபாத்திரம், அந்தக் கதாபாத்திரம் மாறும் தருணம், அது எழுதப்பட்ட விதம் என எல்லாமே சிறப்பு. அந்தக் கதாபாத்திரம் மாறும் கணமாக அந்தக் காட்சியில் யஷ்பலின் நடிப்பு நம்மைப் பெரிதும் கவர்ந்தது.படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நாயகனுக்கு ஏற்படும் சிக்கல், அதை அவர் எப்படி சரி செய்வார் என்ற பரபரப்பு நம்மையும் தொற்றிக்கொள்வது ஓர் சிறந்த திரைக்கதைக்கு சான்றாகிறது. படம் நெடுக நம்பகத்தன்மையுடன், எதார்த்தமாக கையாளப்பட்டது இப்படத்தை மேலும் ரசிக்கும் படியாக்கியுள்ளது.
ஒளிப்பதிவு, காட்சித்தொகுப்பு, இசை என அனைத்தும் இப்படத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்துள்ளன. இரண்டாம் பாதியில் காவல் நிலையத்தில் இடம்பெறும் ஒரு பாடலை மட்டும் அந்த சூழலுக்கு சற்றும் பொருந்தாமல் இருப்பதால் அதை நிச்சயம் தவிர்த்திருக்கலாம். மேலும், சில விஷயங்களை பார்வையாளர்களுக்கு எடுத்தூட்டிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதை அவர்களே புரிந்துகொள்வதாக விட்டுவைத்திருக்கலாம் எனத் தோன்றியது. இறுதிக் காட்சியில் சசிக்குமாரிடம் அந்த வட இந்தியத் தந்தை கேட்கும் ஒரு கேள்வி, அதற்கு சசிகுமார் அளிக்கும் பதில் என அக்கணம் நிச்சயம் படத்தின் உச்சம் என்றே சொல்லலாம். அந்தக் கணத்திற்கு முன்னால் நமக்கு காட்டப்பட்ட கதாபாத்திரம், காட்சிகள், என அனைத்தும் சேர்ந்து அக்கணத்தை படத்தின் உச்சமாக மாற்றுகிறது. இதை கொஞ்சம் சிதறியிருந்தாலும் இப்படம் ஓர் பிரசாரப் படமாக மாறியிருக்கக்கூடும். அதை முழுக்க, முழுக்க எதார்த்த சினிமாவாகத் தந்த இயக்குநர் மந்திர மூர்த்தியின் இயக்கம் மிக்க நன்று. மொத்தத்தில் இந்த ’அயோத்தி’ மனிதத்தை பாடமாய் எடுக்காமல், உணர்வாய் கடத்தும் படைப்பு.