அழகியலை வார்த்தெடுத்த திரைச் சிற்பி... இயக்குநர் கே.விஸ்வநாத்!

அழகியலை வார்த்தெடுத்த திரைச் சிற்பி... இயக்குநர் கே.விஸ்வநாத்!
கே.விஸ்வநாத்... அழகியலை வார்த்தெடுத்த திரைச் சிற்பி. வாழ்க்கையில் தாமதமாக வெற்றியை நெருங்குபவர்கள், பின்னாளில் பெரிய சாதனையாளராகவே மாறிவிடுவார்கள் என்பதற்கு நல்ல உதாரணமாக இருந்தவர் இயக்குநர் கே.விஸ்வநாத். ஸ்டுடியோவில் ஒரு டெக்னீசியனாக துவங்கியவருக்கு, உதவி இயக்குநர் இடத்தை எட்டிப்பிடிப்பதற்கே 35 வயது நெருங்கிவிட்டது. ஆனாலும், வலுவான களம், உபயம் இயக்குநர் ஏ.எஸ்.ராவ். மூகமனசுல மற்றும் டாக்டர் சக்ரவர்த்தி என இரண்டு தெலுங்கு படங்கள் கே.வி.க்கு பயிற்சி பட்டறையாக திகழ்ந்தன.
 
1964ல் வெளியான இரண்டுமே செம ஹிட். மூகமனசுலுதான் இந்தியில் மிலன் என்ற பெயரில் பட்டையை கிளப்பியது. இதே கதையை தமிழில் பிராப்தம் என தயாரித்த நடிகை சாவித்திரிக்கு, பொருத்தமற்ற நடிகர்கள் தேர்வு மற்றும் திரைக்கதை சொதப்பல் தோல்வியைத் தந்தது என்பது தனி சோகக்கதை. டாக்டர் சக்ரவர்த்தி படம் ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்களுடன், அத்தனை அம்சங்களும் கொண்டது. காதல், தியாகம், சகோதர பாசம், ஏமாற்றம், அவமானம் என பல பரிமாணங்களில் கதாநாயகன் நாகேஸ்வரராவ் மின்னியே ஆகவேண்டிய படம். மின்னியும் விட்டார். இந்த இரண்டு படங்கள் 50 படங்களில் பணியாற்றிய அனுபவத்தை தந்துவிட, உடனே துணிச்சலாய் தனியாக படத்தை இயக்கினார் கே.வி.
 
நாகேஸ்வரராவையே ஹீரோவாக போட்டு இயக்க, 1965ல் முதல் படமே விருதுகளை அள்ளிக்குவித்தது. அப்படியே வண்டியை நகர்த்தி வந்தவருக்கு திடீரென, இசை, நடனம் தொடர்பான பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு தொற்றிக்கொண்டது. இப்படித்தான் தனது உறவினரும் நடிகருமான சந்திரமோகனை வைத்து சிரி சிரி மூவா படம் எடுத்தார். நாயகி ஜெயப்பிரதா. கிராமத்து பெண்ணை ஒரு அனாதை இளைஞன் நாட்டியதாரகையாகவும் நடிகையாகவும் ஆக்கி வெற்றி பெறவைத்து இணையும் கதை. கே.வி.மஹாதேவன் இசையில் எல்லா பாடல்களுமே ஹிட், படமும் மெகா ஹிட். ஆனாலும் இன்னமும் சூப்பராக செய்திருக்கலாமே என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்து கே.வி.க்கு. ஒரு வேளை ஜெயப்பிரதாவின் அழகு கூடிக்கொண்டே வந்தது, கே.வி.யை ஆட்டிப்படைத்திருக்கலாம்.

சாகர சங்கமம்... தமிழில் சலங்கை ஒலி. அந்த, மௌனமான நேரம்... இளம் மனதில் என்ன பாரம்... பாடல், பரவச குளியல், முந்தானை நழுவி சாய்ந்தபடி கிடக்கும் ஏகாந்தம், நிலவு பின்னணியில் காதலனோடு  நடக்கும் அழகு என ஜெயப்பிரதாவை கே.விஸ்வநாத் அணுஅணுவாய் காட்சிப்படுத்திய விதம் அவரின் அழகியல் படப்பிடிப்புக்கு பெரிய கிரீடத்தையே சூட்டலாம். மறுபடியும் விட்ட இடத்திலிருந்து வருவோம். 1976க்கு பின் மூன்றாண்டுகள் கழித்து ஜெயப்பிரதாவை ஹிந்திக்குகொண்டு சென்று சிரி சிரி மூவ்வாவை சர்கம் என ரீமேக் செய்தார் கே.வி. சந்திரமோகனுக்கு பதில் ரிஷிகபூர் மேளம் அடிக்க, ஜெயப்பிரதா தப்லீ வாலே தப்லிபஜா என வானத்துக்கும் பூமிக்கும் மாறிமாறி எகிறிக்குதித்து ஆடிய ஆட்டம், பாலிவுட்டை அப்படியே அதிரச்செய்துவிட்டது. ஆடியன்ஸ், ரிபீட் மோடில் கன்டினியூவ் ஆக, அப்புறமென்ன? சர்கம்தான் 1979ன் மியூசிக் பிளாக் பஸ்டர்.

இதே வெற்றிக்களிப்பில் இந்திய சினிமா உலக அளவில் பேசவைக்கப்போகும் படம் ஒன்று தயாராகும் என்று அப்போது யாரும் நினைக்கவில்லை. அதுதான் சங்கராபரணம் படம். மனைவியை இழந்த ஒரு சாஸ்திரிய சங்கீத வித்வானும், தாசி வயிற்றில் பிறந்து நாட்டியம் ஊறிப்போன ஒரு பெண்ணுக்கும் இடையிலான குரு-சிஷ்யை உறவை விவரிக்கும் காவியம் அது. நாகேஸ்வராராவ், சிவாஜி என யார்யாரையோ யோசித்து கடைசியில் சோமயஜுலு என்ற புதுமுகத்தை போட்டார் கே.வி. நிஜமாலுமே நாட்டிய தாரகையான மஞ்சுபார்கவி நாயகியாக ஜொலித்ததில் வியப்பில்லை. ஆனால், சங்கர சாஸ்திரியாகவே கே.வியின் கைவண்ணத்தில் புதுமுகம் சோமாயஜுலு வாழ்ந்துகாட்டிய விதம்தான் வியப்பிலும் வியப்பானது.

எல்லா இசையமைப்பாளர்களுக்குமே இப்படியொரு படத்தை கொடுப்போமா என்று ஏங்கும் வண்ணம் சாஸ்திரிய சங்கீதத்தால் ஏராளமான பாடல்களை குளிப்பாட்டி எடுத்திருந்தார் திரை இசைத்திலகம் கே.வி. மகாதேவன். இவருக்கு மட்டுமல்ல. எஸ்.பி.பாலசுப்ரமணிம், வாணி ஜெயராம் என பலரும் இந்த படத்திற்காக விருதுகள் கொட்டியது என்றால் அதற்கு முழு காரணம் கே.விஸ்வநாத் என்ற இயக்குநர்தான். படம் ஓடஒட ரசிகர்களுக்கு, காட்சி அமைப்புகள், வசனம், திரைக்கதை என எத்தனையெத்தனையோ மிரட்சிகளை ஏற்படுத்தியிருப்பார் கே.வி.
 
எல்லாவற்றையும்விட கிளைமாக்ஸ். அது தான் கேவியின் தனி ஸ்டைல். பொதுவாக சினிமாக்களில் ஒருவர் இறந்த அதிர்ச்சியில் அவர் மேல் விழும் இன்னொரு பாத்திரமும் அப்படியே உயிரைவிடும். அதாவது அடுத்தடுத்து நடக்கும். ஆனால், சங்கராபரணம் கிளைமாக்சில் மேடையில் பாடிவிட்டு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இறுதி கட்டத்தை சங்கர சாஸ்திரி நெருங்க, அவர் காலில் சிஷ்யை மஞ்சு பார்கவி விழ, சாஸ்திரி அந்தப்பக்கமாக சரிவார். அவர் காலில் சிஷ்யையும் சரிவார். யார் உயிர் முன்னே போனது என்று கண்டுபிடிக்கமுடியாத வகையில் இருவரும் ஒரே நேரத்தில் இறக்கிற மாதிரி காட்சியை செதுக்கி கண்கலங்க வைத்துவிடுவார். 

இசை மற்றும் நாட்டியக் கலைஞர்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களை சென்றடையாது. ஆனால், அவர்களும் திரும்ப திரும்ப பார்க்கும் அளவுக்கு காட்சிகளை வைத்து வெற்றிகண்டவர் கே.வி. மேல்தட்டு வர்க்கம். சமையல்கார குடும்பம். சொற்ப சம்பளம் வாங்கும் ஊழியன் என பல தரப்பின் வாழ்வியலை அழகாக கோர்த்து நாயகனையும், நாயகியையும் நாட்டியத்தால் ஆன ஈர்ப்பு வலைகொண்டு இணைத்து தெறிக்கவிட்ட படம் சாகர சங்கமம்.

டோப்பாவை வைத்து நடனம் என்ற பெயரில் ஸ்டார்கள் செய்த சினிமா அக்கப்போரை அவர் சாகர சங்கமத்தில் தோலுரித்த விதம் சமரசத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பதை நன்றாகவே  காட்டியது. எல்லா வித்தைகளும் தெரிந்த கமலை, ரிஸ்க் எடுத்து எதுவுமே தெரியாத அப்பாவியாக நடிக்கவைத்து அதிலும் வெற்றிகண்டவர் கே.வி. சுவாதி முத்யம் படத்தில் ராதிகாவை சுற்றிவந்து தான்தோன்றித்தனமாய் ஆடும் சிவய்யா பாத்திரத்திற்கு வேண்டுமானால் நாட்டியம் தெரியாமல் இருக்கலாம்.
 
ஆனால், கமல் என்ற நிஜ நாட்டியக்கலைஞன், தெரிந்ததையெல்லாம் மறந்துவிட்டு கூடுவிட்டு கூடு பாய்ந்து நடிப்பை அள்ளிக்கொடுத்த காட்சிக்கு கே.விஸ்வநாத் எவ்வளவு மெனக்கெட்டிருக்கவேண்டும்? அதனால்தான் ஆஸ்காரின் கதவுகளை தட்டும் அளவுக்கு போனது, கே.வியின் சுவாதி முத்யம். இப்படி திரையில் கே.வியின் இசைப்பயணத்தை விவரித்துக் கொண்டே போகலாம். எத்தனையோ பேருக்கு நடிப்பில் அடித்தளம்போட்டு இமேஜையை மாற்றி எழுதிய கே.விஸ்வநாத் ஆரம்பத்திலேயே நடிக்க வந்திருந்தால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருப்பார்.

கமலின் குருதிப்புனல் படத்தில் சின்ன ஸ்வாமியாய் காவல்துறையின் துரோகப்புள்ளியாக கொஞ்சமும் ஆர்பாட்டமே இல்லாமல் அசத்திய அவர்தான், யாரடி நீ மோகினி படத்தில் கிராமத்து பெரிய மனிதராக நடித்திருப்பார் என்பதைவிட வந்துபோயிருப்பார் என்றே சொல்லலாம். அவ்வளவு எதார்த்தம், நடிப்பில்... 65 வயதுக்குமேல் கே.வி.நடிக்க ஆரம்பித்தபோதுதான், தமிழ், தெலுங்கு சினிமா உலகம் குணச்சித்திர நடிப்பில் இன்னொரு எஸ்.வி.ரங்காராவாக திகழக்கூடியவரை, தாமதமாக அடையாளம் கண்டுகொண்டது.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாராட்டு விழாவில் கே.விஸ்வநாத் சொன்னார். ’’ஏன் சமூக பிரச்சினைகளை வைத்து படம் எடுக்கமாட்டேன் என்று கேட்கிறார்கள். அவையெல்லாம் ஒரு கட்டத்தில் தீர்ந்துவிடக்கூடியவை. எடுக்க, நிறைய பேர்  இருக்கிறார்கள். ஆனா இசை, நாட்டியம் போன்ற கலைகள் முடிவே இல்லாதவை, அவற்றை நான் நேசிக்கிறேன், சுவாசிக்கிறேன்.. அவ்வளவே’’ மனதுக்கு பிடித்த விஷயத்தை அர்ப்பணிப்போடு செய்தால் தோல்வியே கிடையாது என்பதற்கு இயக்குநர் கே.விஸ்வநாத் வாழ்க்கையையே ஒரு படம் ஆக்கலாம்.

-மூத்த பத்திரிக்கையாளர் ஏழுமலை வெங்கடேசன்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்