இளம் நடிகர்களிடம் நடிப்பு பாடம் படிக்கிறேன்: விக்ரம் நூறாவது நாள் விழாவில் கமல் ஓப்பன் டாக்!

இளம் நடிகர்களிடம் நடிப்பு பாடம் படிக்கிறேன்: விக்ரம் நூறாவது நாள் விழாவில் கமல் ஓப்பன் டாக்!

2022 தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய சவாலாகதான் இருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மாஸ் நடிகர்களின் படங்கள் வசூல் மற்றும் விமர்சன அளவில் எதிர்மறை ரிசல்டை சந்தித்தன. சில வசூலை அள்ளினாலும் ‘வெற்றி’ எனும் வட்டத்தினுள் வராதது அந்த மெகா நடிகர்களின் இமேஜை டேமேஜ் செய்தது. 

இந்த தொடர் சறுக்கலால் தென்னிந்திய சினிமா பிளாட்ஃபார்மில் கோலிவுட் கர்வமாக தலை நிமிராத நிலை இருந்தது. 

ஆனால் ஜூன் 3, 2022 அன்று இந்த நிலை தலைகீழாக மாறியது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருந்த  ‘விக்ரம்’ ஓப்பனிங் ஷோவில் இருந்தே வசூல் மற்றும் விமர்சன ரீதியில் ஆள ஆரம்பித்தது. 

தொடர்ந்து பத்து நாட்கள் வரை ஹவுஸ்ஃபுல் காட்சிகளை கண்டது இந்தப் படம். 

இதன் மூலம் இந்திய திரையுலகில் கோலிவுட்டின் மரியாதை பல புள்ளிகள் எகிறி நின்றது நிதர்சனம். 120 முதல் 150 கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நானூற்று முப்பத்து இரண்டரை கோடி என்கிறது விக்கி. 

இந்திய சினிமாவில் ஒரு டிரெண்ட் செட்டிங் பீஸாக மாறி நிற்கும் விக்ரம் படத்தின் நூறாவது நாள் விழா இன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள ஒரு திரையரங்கில் நடந்தது. அந்த திரையரங்கு சார்பாக நடைபெற்ற விழா என்பதால் சற்று எளிமையாக நடந்தது. 

விழாவில் புத்துணர்வோடு கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசும்போது, “களத்தூர் கண்ணம்மால நடிச்ச பிறகு எங்கேயாவது வெளியில போனா நாலு பேர் என்னை பார்த்து கன்னத்த கிள்ளி கேட்பாங்க ‘நீதான அந்தப் பையன்’ அப்படின்னு. அப்புறம் ஆள் கொஞ்சம் வளர்ந்து, நாலஞ்சு படங்கள்ள ஒர்க் பண்ணின பிறகும் யாரும் என்னை கண்டுக்கல. எனக்கு ஒரே சோகமா போச்சு, என்னடா இது கண்டுக்கமாட்டேங்கிறாய்ங்க! யார் கண்லேயும் நான் விழலையே! அப்படின்னு.  

அதுக்குப் பிறகு நிலைமை மாறிப்போச்சு,  இப்ப எல்லார் கண்ல மட்டுமல்ல இதயங்களிலும் இருக்கிறேன். அன்பு அடைமழையா பொழியுது. இந்த வளர்ச்சிக்கு நானே காரணம் அப்படின்னு சொந்தம் கொண்டாட மாட்டேன். 

பல இயக்குநர்கள், சினிமா தொழில் திறமைசாலிகளின் கைகள் இதற்குப் பின்னாடி முழுமையா இருக்குது. எனக்கு அது தெரியும், இது தெரியும்னு சொல்ல மாட்டேன். என்னை இந்தளவுக்கு ஏற்றிவிட்ட கைகள் பின்னாடி இருக்கிறாங்க, அவங்களுக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்குது. 

மாற்றம் சினிமா துறையை விட்டு போகாது. மாறும் ஆனால் அழியாது, அழியவிட கூடாது. ‘எதிர்காலத்தில் வீட்ல உக்காந்து டி.வி.யிலேயே புது ரிலீஸ் படத்தை பார்ப்பாங்க’ன்னு அன்னைக்கு நான் சொன்னப்ப பலர் கோவப்பட்டாங்க. ஆனா இன்னைக்கு ஓடிடி பெரிய அளவில் ஆளுது. அப்படின்னா சினிமா தொழில் அழிஞ்சுடுமே!ன்னு அச்சப்பட தேவையில்லை. 

என்னதான் வீட்டுல ஃபேன், ஏஸி இருந்தாலும் ஏரிக்கரையில் போய் நின்னு சுத்தமான காற்றை விசாலமா வாங்குறது இல்லையா! அதுமாதிரிதான் டிவியில் புது படத்தை பார்த்தாலும் தியேட்டருக்கும் வருவோம் நாம்.  

கூட்டமா கூடி களிப்புறும் மனுஷங்க நாம. தனியா இருக்க பிடிக்காது நமக்கு. சில நூறு பேர், ஆயிரம் பேருக்கு நடுவுல உட்கார்ந்து தியேட்டரில் ரசிக்கிற சுகம் தனி. 

என்னை பார்த்து ‘எப்படி உங்களை திறமையா செதுக்கிக்குறீங்க?’ன்னு கேக்குறாங்க. நான் இப்பவும் மாணவன் தான். சினிமா துறையில, நடிப்புல பெரிய சீனியரு, சண்டியருன்னு நினைச்சுக்கவே மாட்டேன். 

திரைக்கு வரும் புதியவர்கள், இளையவர்களின் நடிப்பையும் கவனிக்கிறேன். அதில் நல்ல விஷயங்கள் இருக்குதான்னு பார்க்கிறேன். இருக்கும் பட்சத்தில் அதையும் படிச்சுக்குறேன். ஒரு உண்மை என்னவென்றால் நான் படிக்கிற அளவுக்கு அந்த தலைமுறையிடம் விஷயங்கள் இருக்குது” 

என்று எந்த ஈகோவும் இன்றி பேசியபோது கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது.

- எஸ்.ஷக்தி

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.57%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.02%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.4%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்