இரட்டை இசை ராஜாக்களுடன் இணைந்துள்ள வெங்கட் பிரபு - இளையராஜா மகிழ்ச்சி!

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் யுவன்சங்கர்ராஜா ஆகிய இருவருடன் இணைந்து வெங்கட்பிரபு புதிய படத்தை இயக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம், மாநாடு. சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, உள்பட பலரும் நடித்த இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு தனது அடுத்த படத்தினை இயக்க உள்ளார். இதில் நாக சைதன்யா கதாநாயகனாகவும், கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும் நடிக்க உள்ளனர். தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகவுள்ள இத், சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும் இன்று (ஜூன் 23) இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் நாக சைதன்யாவின் 22வது படமான இப்படத்திற்கு "NC 22" எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கான இசையினை இசைஞானி இளையராஜா மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து வழங்க உள்ளனர்.
இதுகுறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"கனவு நனவான தருணம் இது. எனது பெரியப்பா இசைஞானி இளையராஜாவுடன் முதன்முறையாகவும், எனது தம்பி யுவன்சங்கர் ராஜாவுடனும் இணைந்து இப்படத்தினை இயக்க உள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து இது குறித்து இசைஞானி இளையராஜா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். இயக்குனர் வெங்கட்பிரபு, முதன்முறையாக தெலுங்கு சினிமாவினை இயக்க உள்ளதால் முழுக்க முழுக்க தெலுங்கு மொழியில் தனது வாழ்த்துக்களை அந்த வீடியோ பதிவில் இளையராஜா தெரிவித்துள்ளார்.
முன்னதாக இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வருகிற ஜூன் 24 அன்று வெளியாக உள்ள மாமனிதன் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.