ஜெய்பீம் பட விவகாரம் - நடிகர் சூர்யா, ஜோதிகா மீது வழக்குப்பதிவு

ஜெய்பீம் பட விவகாரம் - நடிகர் சூர்யா, ஜோதிகா மீது வழக்குப்பதிவு

ஜெய்பீம் பட விவகாரம் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தில் காவல்துறையால் இருளர் சமூக மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், சிறை மரணங்கள் போன்ற காட்சிகள் வைக்கப்பட்டன. இப்படத்திற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆதரவும் கிடைத்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை பார்த்துவிட்டு இரண்டு பக்கத்திற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். ஆனால், படத்தின் ஒரு காட்சியில் வன்னியர் சமூகத்தின் அடையாளமான அக்னி கலசத்தை காலண்டர் ஒன்றில் வைத்ததாக கூறி பாமக மற்றும் பல்வேறு வன்னியர் சங்க அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், பல்வேறு வன்னியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் நடிகர் சூர்யா மீதும், இயக்குநர் ஞானவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் புகார் அளித்தனர். மேலும், ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் தலைவர் சந்தோஷ் தங்கள் சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையில் படமெடுத்த நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ஜோதிகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளச்சேரி காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்திருந்தார். ஆனால் ஆய்வாளர் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். இந்நிலையில் சந்தோஷ் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பாக வழக்கை விசாரித்த நீதிமன்றம் புகார்தாரர் அளித்த மனுவின் அடிப்படையில் சட்டவிதிமுறையின்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வேளச்சேரி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டது. மேலும், ஐந்து வேலை நாட்களில் புகாரின் அடிப்படையில் சூர்யா மற்றும் ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்