பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க நோ சொன்ன கே.ஜி.எஃப் பட நடிகர்...!

பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க நோ சொன்ன கே.ஜி.எஃப் பட நடிகர்...!

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பான் மசாலா விளம்பரத்தில் நடிக்கமாட்டேன் என்று கூறிய நிலையில் தற்போது கே.ஜி.எஃப் பட நடிகரும் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் உருவான கே.ஜி.எஃப் 2 கடந்த 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கே.ஜி.எஃப் 1 பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கே.ஜி.எஃப் 2 ம் ரசிகர்களிடம் மகத்தான வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், உலகம் முழுவது கே.ஜி.எஃப் 2 ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. 

இந்நிலையில் பிரபல பான் மசாலா விளம்பரத்தில் நடிகர் யாஷ் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அவரது விளம்பர ஒப்பந்தங்களை நிர்வகிக்கும் அர்ஜுன் பேனர்ஜி அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டிருக்கிறார். அதில் “சமீபத்தில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க நாங்கள் மறுப்பு தெரிவித்துள்ளோம். உலகம் முழுவதும் நடிகர் யாஷின் பெயர் பிரபலமடைந்துள்ளது. இவ்வேளையில் நாங்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள விரும்புகிறோம். இனிவரும் காலங்களில் யாஷின் விளம்பரங்களை குறிப்பாக தேர்வு செய்ய இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கான், ஷாருக்கான் ஆகியோர் பான் மசாலா விளம்பரத்தில் நடித்திருந்தனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பால் நடிகர் அக்‌ஷய் குமார் பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் எனவும், உடல்நலத்திற்கு தீங்கு தரும் எந்தவித விளம்பரத்திலும் இனி நான் நடிக்கமாட்டேன் எனவும் கூறியிருந்தார். இதற்கிடையில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பல கோடி ரூபாய் கொடுத்தும் அவர் பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க மறுத்துள்ளார்.

புகையிலை தயாரிப்புக்கு விளம்பரம் செய்ய மறுத்த சாய் பல்லவி, விராட் கோலி, அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார், அல்லு அர்ஜுன் மற்றும் சச்சின் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பட்டியலில் கே.ஜி.எஃப் பிரபலம் யாஷ் இடம்பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்