சாய்னா நேவால் குறித்து நடிகர் சித்தார்த் சர்ச்சை பதிவு: தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

சாய்னா நேவால் குறித்து நடிகர் சித்தார்த் சர்ச்சை பதிவு: தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா காவல் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

நடிகர் சித்தார்த் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆக்டிவாக இயங்கி வருகிறார். இவர் அடிக்கடி அரசியல் ரீதியான கருத்துக்களையும் வெளியிட்டு சில நேரங்களில் சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.

அந்த வகையில் நடிகர் சித்தார்த்தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். கடந்த 5ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் பயணம் விவசாயிகளின் போராட்டத்தால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். சாய்னாவின் இந்த பதிவை டேக் செய்த சித்தார்த், தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் பொருள் கொள்ளும்படி பதில் பதிவிட்டிருந்ததாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. அத்துடன் இந்த கருத்திற்கு பாடகி சின்மயி, நடிகை குஷ்பு, கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தேசிய மகளிர் ஆணையத் தலைவர் சர்மா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து நடிகர் சித்தார்த், "நான் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை. யாரையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவ்வளவுதான். தவறான நோக்கத்தில் நான் எதுவும் குறிப்பிடவில்லை. ஒரு குறிப்பிற்காக மட்டுமே அந்த வார்த்தையை உபயோகித்தேன்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா காவல் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

மேலும், சித்தார்த்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், "உங்களின் கருத்து பெண்களை மற்றும் பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கத்தில் உள்ளது.

ஒரு பெண்ணுக்கு எதிரான இத்தகைய மோசமான மற்றும் பொருத்தமற்ற கருத்தை மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்" என கூறியுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்