மறைந்த நடிகர் விவேக்கை கவுரவிக்கும் வகையில் அவரது பெயரில் தபால் தலை வெளியிடுவது குறித்து மத்திய அரசு பரிசீலினை
மறைந்த நடிகர் விவேக்கை கவுரவிக்கும் வகையில் அவரது பெயரில் தபால் தலை வெளியிடுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
நடிகர், மேடைப்பேச்சாளராக வலம் வந்த விவேக், தனது நகைச்சுவையால் பலரையும் சிரிக்க வைத்து அசத்தினார். இதையும் தாண்டி அவர் சுற்றுச்சூழல் ஆர்வலராக இதுவரை 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். அவற்றில் பல லட்சம் மரக்கன்றுகள் இந்த பூமிக்கு ஆக்சிஜனை அளித்துக் கொண்டிருக்கின்றன.
ஆக்சிஜனுக்காக இன்று நாடே மூச்சுத்திணறி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மரக்கன்றுகளை நடுவதற்காக விவேக் ஆற்றிய தொண்டு குறித்த தகவல் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கவனத்துக்கு சென்றிருக்கிறது.
தற்போதைய சூழலில் ஆக்சிஜனின் தேவை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து, இயற்கையான முறையில் ஆக்சிஜன் தரக்கூடிய மரங்களை வளர்க்க, நடிகர் விவேக் அரும்பணி ஆற்றிருப்பதை எண்ணிப்பார்த்து அவரை கவுரவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு சென்றிருக்கின்றன.
இதையடுத்து, மறைந்த நடிகர் விவேக்கின் சுற்றுச்சூழல் காக்கும் பணிகளை பாராட்டி கவுரவிக்கும் வகையில், அவரது பெயரில் ஸ்டாம்ப் வெளியிடுவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருகிறது.
தற்போது கொரோனா தடுப்புப் பணிகளில் மத்திய அரசு முழு கவனம் செலுத்தி வருதால், மறைந்த விவேக்கை கவுரவிக்கும் வகையிலான அறிவிப்பு மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்துல் கலாமை சந்தித்த பிறகு அவர் அளித்த ஊக்கம் காரணமாகவும், வேண்டுகோளை ஏற்றும் ஒரு கோடி மரம் நடும் பணியை விவேக் முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.