திடீரென சீல் வைக்கப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகம்: விவரம் இதோ.!

திடீரென சீல் வைக்கப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகம்: விவரம் இதோ.!

மண்ணடி ஆர்மீனியன் தெருவில் அமைந்திருக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அலுவலகம். அந்த அலுவலகத்திற்கு சீல் வைக்க மும்பையை சேர்ந்த செபி  அலுவலக அதிகாரிகள் உள்ளூர் வருவாய் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடன் வந்தனர். இந்த செய்தி தீயாக பரவவே தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் அந்தப் பகுதியில் குவிந்தனர். அவர்களை கட்டுப்படுத்தவே போலீசாரும் குவிக்கப்பட்டனர். 

சீல் வைக்க வந்ததன் காரணம் என்ன? என்று செபியின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். "1962ஆம் ஆண்டு இந்திய சீன போருக்குப் பிறகு இந்தியாவில் இருந்து சென்ற மக்கள் விட்டுச் சென்ற சொத்துக்கள் எதிரி சொத்து என்று அழைக்கப்படுகிறது. 1965 மற்றும் 1971ல் போர்களை அடுத்து பாகிஸ்தான் குடியுரிமை எடுத்துக் கொண்டவர்களின் சொத்துக்களையும் எதிரி சொத்து என்று குறிக்கிறது. இந்த சொத்துகளுக்கு காவலாக இருப்பது செபி அமைப்பு தான். இப்படி இந்தியாவில் 9,406 எதிரி சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். மண்ணடியில் உள்ள அந்த இடம் 1190 சதுர அடி கொண்ட கட்டிடமாக இருந்தது. தவ்ஹீத் அமைப்பின் அலுவலகம் ஆக மாறிய பின் மேல்தளம் கட்டப்பட்டுள்ளது" என பக்குவமாய் பதிலளித்தார்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ள தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத்தை சேர்ந்த வேலூர் இப்ராஹிமிடம் பேசினோம். "எதிரி சொத்துகளில் புதிதாக கட்டடம் கட்டக் கூடாது. ஆனால், விதிகளை மீறி புதிய கட்டடம் கட்டியுள்ளனர். குடிநீர், மின் இணைப்பு உள்ளிட்டவைகளை அரசின் முறையான அனுமதி இன்றி தவ்ஹீத் ஜமாஅத் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். ஆக்கிரமித்து வைத்துள்ள கட்டடத்தை மீட்க சென்ற அதிகாரிகளை பணி செய்ய விடாமல் அச்சுறுத்தும் வகையில் ஏராளமானோரை குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு பிரதமர் முதல்வருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பொது அமைதியை குலைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கமிஷனரிடம் புகார் அளித்தேன்" என்றார்.

இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணைத் தலைவர் அப்துல் ரகுமானிடம் பேசினோம். "இந்த கட்டடத்தை 2007 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 12 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடத்தை பாப் இஸ்மாயில் டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரஹமத்துல்லாஹ் நிர்வகித்து வருகிறார். அவர் எங்கள் இயக்க உறுப்பினராகவும் உள்ளார். நாங்கள் ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய் செபிக்கு வாடகை செலுத்தி வருகிறோம். 2017 ஆம் ஆண்டு எதிரிகள் சொத்து தொடர்பான பல விதிமுறைகளை வகுத்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி எதிரி சொத்துக்களை மத்திய அரசு விற்க முற்படும் போது அந்த சொத்தை பயன்படுத்தி வருபவர்கள் வாங்க முற்பட்டால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அதற்கான நோட்டீஸ் முறையாக அந்த சொத்தை பயன்படுத்தி வருபவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவித்துள்ளது. இந்த சொத்திற்கு முறையாக குடிநீர் வரி, மின் கட்டணம் என அனைத்து வரிகளையும் செலுத்தி வருகிறோம். இதனை சீல் வைக்க வந்த செடி அதிகாரிகளிடம் தெரிவித்தோம். ஆனால் எங்களுடைய கோரிக்கை எதையும் கேட்காமல் வைப்பதிலேயே மத்திய அரசு அதிகாரி குறியாக இருந்தார். மக்களுக்கு உதவி வரும் நாங்கள் சொத்தை அபகரிக்கும் என்பது முற்றிலும் பொய். இந்த கட்டிடத்தை வாங்க முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்" என்றார். 

இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் விஎம்எஸ் முஸ்தபாவிடம் பேசினோம். "தமிழகத்தில் சென்னை வேலூர் ஆகிய பகுதிகளில் எதிரி சொத்துக்கள் 14 மட்டுமே உள்ளது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தான் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களை பெரும்பாலும் தொழிலதிபர்கள் அம்பானி, அதானி, நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் பயன்படுத்தி வருகின்றனர். கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகக்கூடிய இடத்தை லட்ச ரூபாயாக சுருக்கி கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கவே மத்திய அரசு முயல்கிறது' என்று குற்றம்சாட்டினார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான எஸ்டிபஐ கட்சியின் மாநில பொது செயலாளர் அமீர் ஹம்சாவிடம் கேட்டோம். "மத்திய மாநில அரசுகள் தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அரசியல் சார்பற்ற இயக்கங்களின் செயல்பாடுகளை இதுபோன்ற அச்சுறுத்தல்கள் முடக்கி விடலாம் என நினைக்கின்றனர். பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பை முடக்க சமீபத்தில் அதன் தலைவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்தினர். ஆனால், ஏமாற்றமே கிடைத்தது இனியும் இதுபோன்ற செயல்களில் மத்திய மாநில அரசுகள் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார். 

இப்போது இந்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு இதையடுத்து தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்தை சீல் வைக்க பிப்ரவரி 5ஆம் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.4%
 • அனுபவக் குறைவு
  24.39%
 • கிரிக்கெட் அரசியல்
  35.54%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.67%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்