பிரசாத் ஒலிப்பதிவு கூடத்தில் இருந்து வெளியேற்றி மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரசாத் ஒலிப்பதிவு கூடத்தில் இருந்து வெளியேற்றி மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு பிரசாத் லேப் நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் உள்ள ஒலிப்பதிவு கூடத்தை 35 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தார். இதற்கிடையில் அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று இளையராஜாவிடம் பிரசாத் லேப் நிர்வாகம் கேட்டது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சமரச பேச்சு நடந்த நிலையில் ஒலிப்பதிவு கூடத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும், பிரசாத் லேப் நிர்வாகன் இடையூறு செய்வதற்கு தடை விதிக்கவும் உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடுத்தார்.
மேலும் இந்த சம்பவங்களால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும்,இதனால் பிரசாத் லேப் சார்பில் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரி இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில், ஒலிப்பதிவு கூடத்தில் உள்ள இளையராஜவுக்கு சொந்தமான பொருட்களை எடுப்பதற்கு கூட அனுமதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று பிரசாத் லேப் நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.