பேரிஜம் ஏரியில் மீன்பிடித்ததாக நடிகர் விமல் மற்றும் சூரி மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் அனுமதி இல்லாமல் கொடைக்கானல் அடர் வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரியில் மீன்பிடித்ததாக நடிகர் விமல் மற்றும் சூரி மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரங்கு அமல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தை பொருத்தவரையில் ஒரு சில மாவட்டங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்ல உரிய அனுமதி பெற்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது எந்தவித சுற்றுலா தளங்களும் இயங்கவில்லை.
இந்நிலையில் கடந்த வாரம் நடிகர் சூரி மற்றும் நடிகர் விமல் கொடைக்கானலுக்கு சென்றுள்ளனர். அங்கு வனத்துறை அலுவலர்களின் உதவியுடன் தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள பேரிஜம் வனப்பகுதிக்குச் சென்று அங்குள்ள ஏரியில் மீன் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. தகவல் அறிந்த வனத்துறையினர் விசாரணை செய்து, அபராதம் விதித்த பின்பு இருவரையும் அனுப்பியதாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படத்தில் அடிப்படையில் மகேந்திரன் என்பவர் இன்று கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் கூறுகையில், “ஊரடங்கு காலத்தில் நடிகர்கள் இருவரும் எப்படி கொடைக்கானல் மலைப் பகுதிக்கு வந்தனர் என்றும், தடை செய்யப்பட்ட பகுதி வழியாக எவ்வாறு அவர்கள் பேரிஜம் ஏரி சென்றார்கள் என்பது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் விசாரணைக்கு பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.