நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக காவல்கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக காவல்கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதை தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் முடிவில் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு ஏதுமில்லை என்பது உறுதியானது. வெடிகுண்டு இருப்பதாக தகவல் கொடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், மிரட்டல் விடுத்தவர் கடலூரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் தான் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, தனது அம்மா செல்போன் மூலம், நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது தெரியவந்துள்ளது.
தனிப்படை போலீசார் அந்த சிறுவனை பிடித்து நெல்லிக்குப்பம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது. அதை தொடர்ந்து அந்த சிறுவனை எச்சரித்த போலீசார் அவரது பெற்றோரிடம் எழுதி வாங்கிக்கொண்டு சிறுவனை விடுவித்தனர்.