"அய்யப்பனும் கோஷியும்" இயக்குநர் சச்சி காலமானார்... மலையாள பிரபலங்கள் அதிர்ச்சி
'அய்யப்பனும் கோஷியும்' படத்தின் இயக்குநரான சச்சி காலமானார்.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' படத்தை இயக்கியவர் சச்சி. இந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்தது. பிரித்விராஜ், பிஜு மேனன் இணைந்து நடித்திருந்த இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சச்சி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மொத்த இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது மாரடைப்பும் ஏற்பட்டதால், திருச்சூரில் உள்ள ஜூபிளி மிஷன் மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. தற்போது சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார்.
மலையாளத் திரையுலகில் பிரபலமான கதாசிரியர் சச்சி, சேது என்பவருடன் இணைந்து எழுதிய 'சாக்லெட்' என்ற படம் வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து ராபின் ஹூட், மேக் அப் மேன், சீனியர்ஸ் ஆகிய படங்களுக்கு இணைந்து சேது - சச்சி ஜோடி பணிபுரிந்துள்ளது. இறுதியாக 'டபுள்ஸ்' படம் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து இந்த இணை பிரிந்தது.
சேதுவோடு இணைந்து எழுதியது மட்டுமன்றி, ரன் பேபி ரன், அனார்கலி, ராமலீலா உள்ளிட்ட படங்களுக்கு சச்சி தனியாகவும் கதை எழுதியுள்ளார். 2015ஆம் ஆண்டு ப்ரித்விராஜ், பிஜு மேனன் இணைந்து நடித்த 'அனார்கலி' படத்தை இயக்கி இயக்குநராகவும் அறிமுகமானார் சச்சி. சமீபத்தில் 'அய்யப்பனும் கோஷியும்' படத்தை இயக்கியிருந்தார்.
சச்சியின் மறைவு மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு முன்னணி திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.