மணிரத்னம் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில் 1987ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நாயகன்'. ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மதியிலும் இத்திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனதை தொடர்ந்து இந்த ஜோடி மீண்டும் எப்போது இணையும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எழுந்தது. மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரசிகர்கள் தொடர்ந்து முன்வைத்து வந்தனர்.
இப்படியிருக்க மணிரத்னம் இயக்கத்தில், கமல் ஹாசன் 'KH 234' படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும், ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பணியில் மணிரத்னம் பிசியாக இருந்ததாலும், இந்தியன் 2 பணியில் கமல் ஹாசன் பிசியாக இருந்ததாலும் 'KH 234' குறித்த பெரிய அப்டேட்டுகள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை வித்யா பாலனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.