கன்னட சினிமாவின் அறிமுக இயக்குநர் கிரண்ராஜ் இயக்கத்தில் உருவான ‘777 சார்லி’ திரைப்படம் வரும் ஜூன் 10ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. நடிகர் ரக்ஷித் ஷெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இந்தப் படம் வெளியான போதே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சகர்கள் மத்தியிலும் பல பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில், தற்போது இந்தப் படம் தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.
மேலும், இந்தப் படத்தின் இயக்குநர் கிரண்ராஜ், சிறந்த இயக்குநருக்கான விருதும் பெறவுள்ளார். இதுகுறித்து இயக்குநர் கிரண்ராஜ் பேசுகையில், “இது அனைத்தும் எங்கள் குழுவின் கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமே. ஒரு காலத்தில் எங்கள் கன்னட சினிமா, எங்கள் மாநிலத்தை விட்டே தாண்டாமல் இருந்தது. ஆனால், தற்போது நாங்கள் இந்தியா முழுவதும் உள்ள சினிமாக்களோடு போட்டி போட்டு வருகிறோம். இதில் எங்களுக்கு மிகப் பெரும் பெருமை” எனத் தெரிவித்தார். மறுபக்கம் இந்தப் படம் ஜப்பானில் டப் செய்யப்பட்டு விரைவில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக லாதின் அமெரிக்கா, தாய்வான் போன்ற நாடுகளில் விரைவில் வெளியாகுமெனவும் இயக்குநர் கிரண்ராஜ் தெரிவித்துள்ளார்.