செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. இதன்படி இன்று முதல் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.
புழக்கத்திலிருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு புதிய 500 ரூபாய் நோட்டுகளும் 2000 ரூபாய் நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அச்சிடும் பணிகளை ரிசர்வ் வங்கி தொடங்கியது. மற்ற வகை ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்ததால் 2018 -19ல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் 2000 நோட்டுகளின் பணபுழக்கமும் நாளடைவில் குறைந்தது. இந்த சூழலில் தான் ரிசர்வ் வங்கி செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி இன்று முதல் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ள முடியும். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 20,000 வரை (10 நோட்டுகள்) வரை மாற்றி கொள்ளலாம் என்றும் பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் அல்லது எந்த வங்கிகளின் கிளையிலும் 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்து மற்ற மதிப்புகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அனைத்து வங்கிகளும் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதை, கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் செய்து முடிக்கவும், பொதுமக்களுக்குப் போதுமான நேரத்தை வழங்கவும், 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் அல்லது மற்ற நோட்டுகளாக மாற்றும் வசதியை செய்யவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.