கும்பகோணம்: சனி பகவானுக்கு ஜப்பான் நாட்டினர் சிறப்பு வழிபாடு - குடும்பத்துடன் சாமி தரிசனம்
தசரதரின் மகனான ஸ்ரீராமன் இங்கு வந்து புனித நீராடி மண்ணாலான ஒரு லிங்கத்தை செய்து வழிபட்டார் என்பது ஐதீகம்
கும்பகோணம் அருகே திருநறையூர் ராமநாதசுவாமி கோயிலில் சனி பகவானுக்கு குளிகை கால நேரத்தில், ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகே திருநறையூரில் பருவதவர்த்தினி சமேத ராமநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோயில் சோழ காலத்தில் கட்டப்பட்டது. 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது ஆகும்.
இங்கு, சனி பகவான், மந்தாதேவி, ஜேஷ்ட்டா தேவி என இரு மனைவிகள் மற்றும் மாந்தி, குளிகன் என இரு மகன்களுடன் அருள் பாலித்து வருகிறார். காக்கை வாகனத்துடன் கொடிமரம் பலி பீடங்களுடன் தனி சன்னதி கொண்டு மங்கள சனி பகவானாக போற்றப்படுகிறார்.
மேலும், அயோத்தியை ஆட்சி செய்த தசரதனுக்கு ஏற்பட்ட நோய் தீர, அவர் இங்கு குளத்தில் நீராடி, சுவாமியையும், மங்கள சனி பகவானையும் வழிபட்டு நோய் தீர்ந்தது.
பின்னர், இதனையறிந்த தசரதரின் மகனான ஸ்ரீராமன், இங்கு வந்து புனித நீராடி, மண்ணாலான ஒரு லிங்கத்தை செய்து வழிபட்டார் என்று கூறப்படுகிறது.
இதனால், ஆலயத்தில் தினசரி குளிகை காலத்தில் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் பயபக்தியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் மற்றும் எள் சாதம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.