ஸ்ரீரங்கம்: ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஸ்ரீரங்கம்: ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ஸ்ரீரங்கம்: ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ரங்கநாதர் கோவிலில் நடந்த சித்திரை தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ரெங்கா, ரெங்கா என பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியுள்ளது ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயம். இந்த ஆலயம் 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகும். ’பூலோக வைகுண்டம்’ என பக்தர்களால் போற்றப்படுவதுமான, ரெங்கநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இக்கோவிலுக்கு தமிழகத்திலிருந்தும், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நம்பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலில் ஆண்டுதோறும் ’விருப்பன் திருநாள்’ எனப்படும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். 

அதன்படி, கடந்த ஏப்ரல் 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோவிலில் 10 நாட்கள் நடைபெறும்  இந்த சித்திரை திருவிழாவின்போது நம்பெருமாள் கருடவாகனம், யாளிவாகனம், யானை வாகனம், தங்ககுதிரை வாகனம், பூந்தேர், கற்பகவிருட்சவாகனம் என தினசரி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் 9ம் நாளான இன்று (19.04.2023) தேர்பவனி வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நம்பெருமாள் அதிகாலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பெரிய திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர் பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்துச்சென்றனர். தேரானது 4 சித்திரை வீதிகளில் வலம் வந்து மூலஸ்தானம் சென்றடையும். இதில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை என பல மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

சித்திரை தேரின்போது நம்பெருமாளை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும், சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம் என்பதால் பெருந்திரளானோர் பக்தர்கள் தீபம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். மேலும் பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்வதற்காகவும், வடம்பிடித்து இழுத்துச் செல்லவும் போலீசாரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com