திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தெப்பத்திருவிழா... கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தெப்பத்திருவிழா... கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாக திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப்பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம்.

அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும். லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து  வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர் என்று அறியப்படுகிறது.

சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்ட திருத்தலம்.  இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் தெப்ப திருவிழா பிரசித்தி பெற்றது. தை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

முன்னதாக கோவிலின் கம்பத்தடி மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட கம்பத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு,மா இலை, பூக்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 8 மணிக்கு கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. 

உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் பல்லக்கில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

இந்த திருவிழாவில் தினமும் சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்னம், சேஷ, தங்க மயில், பச்சைக் குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். 

ஜனவரி 30-ந்தேதி தை கார்த்திகை நாளில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெறும். பின்னர் சுவாமி தெய்வானையுடன் சிறிய தேரில் எழுந்தருளி வீதி உலா வருவார்.  

முக்கிய நிகழ்ச்சியான  தெப்பத்திருவிழா ஜனவரி 31-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை நடைபெறுகிறது. அப்போது சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருவார். இரவு தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 







Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்